Sunday, December 2, 2018

ஜெ. படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ!!

ஜெ. படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ!



7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி டிசம்பர் 4ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதற்கிடையே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து இன்று (டிசம்பர் 1) திருவல்லிக்கேணியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆலோசனை நடத்தினர்.



இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மாயவன், “7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் ஜெயக்குமாரிடம் 20 ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை நடத்தினோம். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. எங்களது கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துச் செல்வோம் என்று அமைச்சர் உறுதிப்படக் கூறவில்லை. எனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5 ஆம் தேதி அவரது புகைப்படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.



அதுபோன்று அறிவித்தபடி டிசம்பர் 4ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடரும், டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்துப் பேசினால் போராட்டத்தைக் கைவிடுவது பற்றி பரிசீலனை செய்யப்படும், இல்லையெனில் டிசம்பர் 7 முதல் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேண்டுகோள்



ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (டிசம்பர் 1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில், அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய தருணத்தில், புயலால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய விவசாய பெருமக்கள், மீனவ பெருமக்கள், பொதுமக்கள் ஆகியவர்களின் துயர் துடைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு தொய்வு ஏற்படாமல், விரைவாகப் பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.



மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அளித்துள்ள கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து, செயல்படுத்த வாய்ப்புள்ள கோரிக்கைகளை அரசு செயல்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப அரசு முழு முயற்சி எடுத்து வரும் காலகட்டத்தில், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரையும் முதல்வர் கேட்டுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News