Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 6, 2018

மருத்துவர்கள் போராட்டத்துக்குத் தடை: அவசர வழக்கு!




தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று இன்று மதியம் அவசர வழக்காக விசாரிக்கப்பட இருக்கிறது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, கடந்த மூன்று நாட்களாக தமிழக அனைத்து மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழக மருத்துவர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையொட்டி, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கடுமையாகப் பாதிகப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் மருத்துவர்கள்.



நேற்று (டிசம்பர் 5) சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன். அப்போது, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுவதைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். டிசம்பர் 8ஆம் தேதி முதல், அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த அறுவை சிகிச்சைகளைப் புறக்கணிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

“இதனைத் தொடர்ந்து வரும் 11ஆம் தேதி அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் 2 மணி நேரம் வரை போராட்டத்தில் ஈடுபடுவார்கள். டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் சென்னை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 48 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர். வரும் 13ஆம் தேதியன்று தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். தங்களை அழைத்து தமிழக முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று கூறினார் பாலகிருஷ்ணன். இன்றும் அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது.



அவசர வழக்கு

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார் மதுரையைச் சேர்ந்த ஜலால். இந்த மனு அவசர வழக்காக, இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.



கடந்த 3 நாட்களாக நடைபெறும் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நோயாளிகள் அவதியுறுவதாகவும், இதனால் அவர்களது போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், அவர் புகார் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் இன்று பிற்பகலில் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News