Saturday, December 15, 2018

கழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: சிறுமியின் வீட்டுக்கு சென்று கலெக்டர் பாராட்டு








வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் இஷானுல்லாஹ். இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 

ஏழ்மை காரணமாக அவர்களின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் திறந்த வெளியில் கழிப்பிடம் சென்று வந்தனர். இதை அவமானமாக கருதிய ஹனீபாஜாரா, தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தருமாறு கேட்டாள். அதற்கு அவர், வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தால், வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் ஹனீபாஜாரா நன்றாக படித்து வகுப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று வருகிறாள்.

அதன் பிறகும் தந்தை கழிவறை கட்டித்தராத காரணத்தால் 10-ந் தேதி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் தனது தந்தை மீது ஹனீபாஜாரா புகார் அளித்தாள். இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் ராமன், சிறுமியின் வீட்டில் தனிநபர் கழிவறை திட்டத்தின் மூலம் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






அதன் பேரில் ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள், சிறுமியின் வீட்டில் கழிவறை கட்ட நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஆம்பூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராகவும் ஹனீபாஜாரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கலெக்டர் ராமன், ஹனீபாஜாரா வீட்டுக்கு நேற்று சென்று அவரை பாராட்டி சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, பரிசு வழங்கினார். பின்னர் ஹனீபாஜாரா, கலெக்டரிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டாள். மேலும் அங்கு கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறுகையில், ஹனீபாஜாரா இந்திய அளவில் நமக்கு பெருமையை தேடி தந்துள்ளார். இதுபோன்ற விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்றார்.






No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News