Tuesday, December 11, 2018

முக அடையாளம் மூலம் வருகைப் பதிவு: அனைத்து அரசு மகளிர் பள்ளிகளிலும் ஓராண்டுக்குள் அமல்: செங்கோட்டையன் தகவல்



செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து முக அடையாளம் மூலம் வருகைப்பதிவு செய்யும் முறையை சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்திய அமைச்சர்



முக அடையாளம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை தனியார் நிதியுதவியுடன் ஓராண்டுக்குள் அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாணவிகளின் முகப்பதிவு மூலம் வருகையைப் பதிவுசெய்யும் திட்டம் (Artificial Intelligence Based Smart Attendance System) முதல் முறையாக சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஐசிஇடி என்ற தனியார் நிறுவனம் இதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, முதலில் மாணவிகளின் முகம், படம் பிடிக்கப்பட்டு பிரத்யேக ஆண்ட்ராய்டு செயலி மற்றும் கணினி சர்வரில் சேமிக்கப்படும்.

எவ்வாறு செயல்படும்? வகுப்பு ஆசிரியர் தனது செல்லிடப்பேசியில் இந்த ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வருகைப்பதிவு எடுக்கும்போது ஆசிரியர் மாணவிகளை நோக்கி தனது செல்லிடப்பேசியில் குழுவாகப் படம் பிடிப்பார். அப்போது மாணவிகளின் முகப்படம், செயலி வழியாக வருகைப் பதிவாகும். இதையடுத்து வகுப்புக்கு வந்திருக்கும் மற்றும் வராத மாணவர்களின் விவரங்களை அது ஒரு நொடியில் காண்பித்துவிடும். 



ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியே படம் பிடிக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக வகுப்பிலுள்ள அனைத்து மாணவிகளின் முகங்களையும் படம் பிடித்தால் அனைவரின் வருகையும் பதிவாகிவிடும். இதனால் வருகைப்பதிவை ஒரே நொடியில் மேற்கொண்டுவிடலாம்.
இதனால், நேரம் மிச்சமாகும். வகுப்புக்கு வராதவர்களுக்கு தவறான வருகைப்பதிவு செய்ய முடியாது. தற்போது இந்த வசதி சோதனை முயற்சியாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்புக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த... இந்தப் புதிய வசதியை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திங்கள் கிழமை அறிமுகப்படுத்தி பேசியது: 

அதிநவீன தொழில்நுட்பத்தில் மாணவிகளின் முகப்பதிவில் வருகைப்பதிவு செய்யும் திட்டம் இந்தியாவிலேயே முதல்முதலாக தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) உதவியுடன் ஓராண்டு காலத்துக்குள் அனைத்து அரசுப் பெண்கள் பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.



அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவுள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்த மாணவரின் பெயர், முகவரி, ரத்த வகை உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதலாக அவர்களின் ஆதார் எண் மற்றும் கியூ.ஆர். பார்கோடு வசதியுடன் ஸ்மார்ட் அட்டையை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்தை ஜனவரி மாதம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்றார். 

விழாவில் மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விருகை ரவி, சத்யநாராயணன், ஐசிஇடி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர் செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி ஜி.சரஸ்வதி, பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.சி. சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News