Friday, January 18, 2019

கல்லூரிகளில் 10% கூடுதல் இடங்கள்: 10% இடஒதுக்கீடு எதிரொலி





குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் கண்காட்சியில் இஸ்ரோ அமைத்துள்ள அரங்கைப் பார்வையிடும் பிரதமர் மோடி.
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் நிகழாண்டிலேயே 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.



தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆமதாபாதில் 9ஆவது வைப்ரன்ட் குஜராத் சர்வதேச முதலீட்டாளர் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கண்காட்சி அரங்கை சுற்றிப் பார்வையிட்ட மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த சில பொருள்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதன்பின்னர் ஆமதாபாதில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் படேல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
எனது அரசுக்கு அரசியல் ரீதியில் துணிச்சல் இருந்த காரணத்தால்தான், பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியில் ஏழைகளாக இருப்போருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர முடிந்தது. ஏற்கெனவே சமூக ரீதியில் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையிலேயே, மத்திய அரசு இந்த இடஒதுக்கீடு அளித்துள்ளது.


இந்த சட்டம், நாடு முழுவதும் உள்ள 40,000 கல்லூரிகள், 900 பல்கலைக்கழகங்களில் நிகழ் கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும். இதற்கு ஏதுவாக, கல்வி நிறுவனங்களில் 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் எனது அரசு உறுதிபூண்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் பல்வேறு நிறுவனங்களும் இணைக்கப்படும். இப்படி செய்வதன் மூலம், ஏழைகள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 100 நாள்களில் 7 லட்சம் ஏழைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஆமதாபாதில் தற்போது திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைதான், நாட்டிலேயே ஹெலிகாப்டர் இறங்குதளம் கொண்ட முதல் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை மூலம், குஜராத்தில் மருத்துவத் துறை மேம்படும்.




ஆமதாபாத் நகர மேயராக சர்தார் வல்லபபாய் படேல் பதவி வகித்த காலம் முதல் தற்போது வரையிலும், சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு ஆமதாபாத் மாநகராட்சி முன்னுரிமை கொடுத்து வருகிறது என்றார் மோடி.
இதன்பின்னர் ஷாப்பிங் விழா என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியையும் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், மத்திய அரசு கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக உதவி செய்துள்ளது. சுற்றுலா துறையிலோ, உற்பத்தி துறை அல்லது சேவைத் துறையிலோ, கடந்த நான்கரை ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறது. சிறு வியாபாரிகளுக்காக ஜிஇஎம் எனப்படும் வலை
தளத்தை மத்திய அரசு உருவாக்கி தந்துள்ளது. இதன்வாயிலாக, தற்போது வரை ரூ.16,500 கோடி மதிப்புக்கு வணிகம் நடைபெற்றுள்ளது.


ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் அடிப்படையில், வங்கிகள் கடன் கொடுக்கும் நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. மறைமுக வரியை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார் மோடி.
ஆமதாபாதில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய் சிலையை மோடி திறந்து வைத்தார். அப்போது மோடி பேசியபோது, நாட்டு மக்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்ப அறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான், விக்ரம் சாராபாய்க்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றார்.




வைப்ரன்ட் குஜராத் சர்வதேச முதலீட்டாளர் கண்காட்சியில், முதல் முறையாக ஆப்பிரிக்க நாடுகளுக்காக தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் குழுவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. கண்காட்சிக்கு 1,500 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வணிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News