Monday, January 7, 2019

தமிழகம் முழுவதும் 2,000 அங்கன்வாடி மையங்களில் உபரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில், தொடக்கப்பள்ளிகளில் உபரியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியைகளை நியமிக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.





தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் தாய்மொழியுடன் கூடிய ஆங்கில வழிபள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளிகளை போன்று தொடக்கப்பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கேற்ப அங்கன்வாடி மையங்களை நர்சரி பள்ளிகளாக மாற்றும் முடிவை அரசு எடுத்தது.




முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு மிக அருகில் உள்ள 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களை நர்சரி பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இவற்றின் மூலம் 58 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள்.



இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உபரியாக அடையாளம் காணப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியைகளை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்துக்கும், தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அங்கன்வாடி மையங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார்கள் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News