Sunday, January 13, 2019

ஒரே நாள்ல 2 அரசு தேர்வுகள்.. எதுக்கு செல்வது?.. மண்டையை பிய்த்துக்கொள்ளும் தேர்வாளர்கள்





சென்னை:தமிழக அரசு நடத்தும் தேர்வும், மத்திய அரசு அறிவித்துள்ள போட்டி தேர்வும் ஒரே நாளில் நடத்தப்படுவதால் எதை எழுதுவது என்று தெரியாமல் தேர்வாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. அதில் தேர்வானவர்கள் அடுத்த கட்டமாக உடற்கூறு அளத்தல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் போன்றவற்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



வரும் 21-ம் தேதி சென்னையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அந்த பணிகள் நடைபெறவுள்ளது. அதேபோன்று, மத்திய அரசின் ரயில்வே தேர்வு வாரியம் சார்பில் உதவி லோகோ பைலட் பதவிக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
அதில் தேர்வானவர்களுக்கு அடுத்து இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வும் அதே ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 2 தேர்வுகளிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் முதல்நிலை தேர்வில் தேர்வு பெற்று, 2-ம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.



ஆனால், 2 தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படுவதால் எதில் பங்கேற்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள போட்டி தேர்வாளர்கள், 2 தேர்வுகளில் முதல்நிலையை கடந்து அடுத்த கட்ட தேர்வுக்கு பலர் தகுதி பெற்றுள்ளனர்.



ஆனால் 2 தேர்வுகளும் ஒரே நாளில் நடக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதேனும் ஒரு தேர்வு தேதியை தள்ளி வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News