Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 30, 2019

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர்கள் இடைநீக்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் உத்தரவு

பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் ஆசிரியர்கள் ஆவர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு), தமிழ்நாடு அரசு தலைமை செயலக ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் இணைந்து, 30-ந் தேதியன்று (இன்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக கூறியுள்ளன.



இடைநீக்கமும், பரபரப்பும்

இதனால் தலைமை செயலகம் உள்பட தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் ஸ்தம்பிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தலைமை செயலக ஊழியர்கள் பலரை இடைக்கால பணி நீக்கம் செய்து சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தலைமை செயலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

வேளாண்மைத்துறையின் பிரிவு அலுவலர் எம்.ராஜேஸ்வரிக்கு வேளாண்மை உற்பத்தி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவில், 22-ந் தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழ்நாடு சிவில் சர்வீஸ் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17 (இ) பிரிவின்படி உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல சட்டமன்ற செயலகத்தை சேர்ந்த ஹரிசங்கர் உள்பட 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்க உத்தரவு அளிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30-ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது.

விளக்கம்



இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அறிவித்திருந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் குறித்த சில தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நிருபர்களிடம் நேற்று மாலை விளக்கம் அளித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்திருந்தோம். இதை முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரிடம் கூறியிருந்தோம்.

அழைத்து பேசவில்லை

ஆனால், எங்களை அரசு அழைத்து பேசவில்லை. எனவே ஏற்கனவே அறிவித்தபடி 30-ந் தேதி (இன்று) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நிச்சயமாக நடத்துகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து பிரிவினரும் இதில் பங்கேற்க வேண்டும்.

எங்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். எங்களை அழைத்து பேசவேண்டும். கைது நடவடிக்கைகளையும், இடைநீக்க உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். விடுப்பு எடுத்தால் நோட்டீஸ் பிறப்பிப்பது உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் உள்ளன. 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசுவார் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால், 31-ந் தேதி (நாளை) மீண்டும் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பேசுவோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம், நிதித்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அது எங்கும் போகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

எச்சரிக்கை சுற்றறிக்கை

பீட்டர் அந்தோணிசாமியின் பேட்டி வெளியான சில நிமிடங்களில், அனைத்து அரசு துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய சுற்றறிக்கை வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

30-ந் தேதியன்று சில சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஏற்கனவே பிறப்பித்த அறிவுரைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சம்பளம், சலுகை இல்லை

தமிழக அரசு ஊழியர்கள் யாரும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதமான நடவடிக்கையில் ஈடுபடுவது, போராட்டத்தில் பங்கேற்பது அல்லது போராட்டம் நடத்த இருப்பதாக அச்சுறுத்துவது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிப்பது போன்ற நடவடிக்கை ஈடுபடுவது, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் 1973-ன் 20, 22, 22ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் விதிமீறலாக கருதப்படும்.



அந்த விதிமீறலில் ஈடுபடும் ஊழியர் மீது அதற்கான விதியின் கீழ் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வேலைக்கு வராத நாளை, அங்கீகரிக்கப்படாத விடுமுறையாக கருத வேண்டும். வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு சம்பளமோ, சலுகையோ வழங்கப்படக்கூடாது.

கடுமையான நடவடிக்கை

போராட்டத்தில் ஈடுபடும், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பகுதிநேர ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் போன்றவர்கள், உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான விதிகளை யாரும் மீறாதபடி கவனிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத விடுப்பில் இருந்து கடமை தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 30-ந் தேதியன்று அவசர நிலையில் உள்ளவர்கள் தவிர, மற்ற யாருக்கும் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படக் கூடாது. விடுப்பின் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியது ஊழியர்களின் கடமை.

எனவே அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் வேறு நாட்களில் நடக்க இருக்கக்கூடிய போராட்டம் ஆகியவற்றை கவனித்து, விதிமீறலை பற்றிய அறிக்கையை அனுப்ப வேண்டும். வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்கள் பற்றிய விவரங்களையும் அனுப்ப வேண்டும். அத்துடன், வந்த ஊழியர்கள் அந்த நாள் முழுவதும் பணியில் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும், தலைமை செயலக ஊழியர்கள் பலருக்கும் தனித்தனி சுற்றறிக்கை அந்தந்த துறைச் செயலாளர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதில், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கூடாது, கூட்டமாக கூடக்கூடாது, அரசுக்கு எதிராக கோஷமிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

விலகல்

ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்த அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்களில், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு), அதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் விலகுவதாக அந்த சங்கம் கூறியுள்ளது. இதுதவிர, மேலும் 2 சங்கங்கள் அதிலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று நடத்தப்படும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் முழு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் அருள் அறிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News