Sunday, January 6, 2019

மூன்றாம் பருவம் துவங்கிய பிறகும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர் நியமனம் இல்லை படிக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

3ம் பருவம் தொடங்கிய பிறகும்கூட பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்காமல் மாணவர்களின் எதிர்காலத்தோடு பழங்குடியினர் நலத்துறை விளையாடி வருவது கல்வியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட பர்கூர் மலையில் அமைந்துள்ளது கொங்காடை மலைகிராமம். இக்கிராமத்தில் கடந்த 93ம் ஆண்டு பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது.



பெரியூர், சுண்டைப் போடு, அக்னிபாவி, செங்குளம், கோயில் நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வந்தனர். பின்னர் இப் பள்ளி 1998ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் 9ம் வகுப்பு படிக்க வேறு பள்ளி இல்லாததால் கொங்காடை பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்ததையடுத்து கடந்தாண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, நடப்பாண்டில் 9ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 50 மாணவர்கள் 9ம் வகுப்பில் சேர்ந்தனர். இப் பள்ளியில் சேர்ந்ததோடு சரி, ஆசிரியர்கள் இல்லாததால் இன்னும் பாடங்களை படிக்காமல் உள்ளனர். 2 பருவத்தேர்வுகள் முடிவடைந்து 3ம் பருவம் தொடங்கி விட்ட நிலையில் இன்னும் முதல் பருவம் பாடங்களை கூட மாணவர்கள் படிக்காமல் இருப்பது பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இது வரை தரம் உயர்த்தியதற்கான அரசாணை கூட வெளியாகவில்லை. இதனால் ஆசிரியர்களையும் நியமிக்க முடியாத நிலை இருந்து வருகின்றது. பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் பல முறை வலியுறுத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மலைவாழ் மாணவர்களின் கல்வியின் மீது அக்கறை செலுத்தாமல் விளையாடி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே மத்திய அரசின் கட்டாய கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கல்வி கற்கும் உரிமையை பறிக்கும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
5 பள்ளிகள் புறக்கணிப்பு



கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் 155 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்தது. இதில், 150 பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வருகிறது. மீதமுள்ள 5 பள்ளிகள் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள். பள்ளிக் கல்வித்துறையன் கீழ் உள்ள 150 பள்ளிகளிலும் தரம் உயர்த்திய பிறகு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். ஆனால் நலத்துறையின் கீழ் உள்ள 5 பள்ளிகளில் மட்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News