Tuesday, January 8, 2019

நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையிலேயே பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி: ஏஐசிடிஇ முடிவு





நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டு முதல் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி நீட்டிப்பும், புதிய பொறியியல் கல்லூரிகள் அனுமதியும் பெறவேண்டியது கட்டாயம். அதன்படி 2019-20 கல்வியாண்டு அனுமதி நடைமுறைகளை ஏஐசிடிஇ திங்கள்கிழமை வெளியிட்டது. அனுமதி, அனுமதி நீட்டிப்புப் பெற பொறியியல் கல்லூரிகள் ஆன்-லைனில் வரும் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க பிப்ரவரி 3 கடைசி நாளாகும்.



நிபுணர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில்... நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் வெகுவாகக் குறைந்து வருவது, பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இதற்கு உரிய தீர்வு காணும் நோக்கத்தோடு இதுகுறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை ஏஐசிடிஇ அமைத்தது. தீவிர ஆய்வை மேற்கொண்ட இந்தக் குழு பல்வேறு பரிந்துரைகளை அண்மையில் சமர்ப்பித்தது.
அதில், 2020-ஆம் ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கக்கூடாது.
கல்லூரிகளில் கூடுதல் சேர்க்கை இடங்களை அனுமதிக்கும்போது, அந்த மாநிலத்தின் திறன், வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.



பாரம்பரிய பொறியியல் துறைகளான இயந்திரவியல், மின் பொறியியல், கட்டடவியல் பொறியியல், மின்னியல் மின்னணுவியல் பொறியியல் ஆகிய துறைகளில் 40 சதவீத சேர்க்கைதான் நடைபெறுகிறது.
ஆனால், புதிய வளர்ந்து வரும் துறைகளான கணினி அறிவியல் பொறியியல், விண்வெளி தொழில்நுட்பம், இயந்திர மின் நுட்பவியல் (மெக்கட்ரானிக்ஸ்) ஆகிய துறைகளில் 60 சதவீத சேர்க்கை உள்ளது. எனவே, பாரம்பரிய பொறியியல் துறைகளில் இடங்களை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது. மாறாக வளர்ந்து வரும் துறைகளில் அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கலாம்.
பொறியியல் பேராசிரியர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த அறிவைப் பெறுவதை உறுதிப்படுத்தவேண்டும்
மேலும், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பி.எட். போன்ற கல்வியியல் பட்டயம் அல்லது டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முடித்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்தது.




இந்த நிலையில், 2019-20 பொறியியல் கல்லூரிகள் அனுமதி நடைமுறையில், இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்படும். அதனடிப்படையிலேயே, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அல்லது அனுமதி நீட்டிப்பு வழங்கப்படும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News