Thursday, January 31, 2019

சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து விவகாரம் : தமிழக அரசின் ஆணை ரத்து :சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஐம்பது சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவீத சிறுபான்மையின மாணவர்களை சேர்க்க வேண்டும்.



இந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். இந்த விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் சிறுபான்மை அந்தஸ்து கிடையாது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் ஆப் மேரி கல்வி நிறுவனம் உள்பட 140 கல்வி நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.



அதில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள 2,500 பள்ளிகளை நிர்வகிக்கும் இந்த அமைப்புகளின் சார்பில் ஆஜரான வக்கீல், சிறுபான்மை பள்ளிகள் துவங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையை தடுக்கும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதால் அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.
தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. தேசிய சிறுபான்மை ஆணையம்தான் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். எனவே, தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படுகிறது.



தகுதியான சிறுபான்மை மாணவர்களை சேர்த்துக் கொள்வதாக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் அளித்த உத்தரவாதத்தை, பள்ளிகள் மீறும்பட்சத்தில், மாநில அரசு, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News