சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் 1,682 பேர் பங்கேற்று, யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில், 25-ஆவது சர்வதேச யோகா திருவிழா கடந்த 4- ஆம் தேதி கடற்கரைச் சாலை காந்தித் திடலில் தொடங்கியது. ஜனவரி 7- ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 1,288 யோகா கலைஞர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த யோகா திருவிழா புதுச்சேரியில் முத்தியால்பேட்டை தனியார் மண்டபம், அலைன் பிரான்ஸிஸ், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, காந்தித் திடல், உப்பளம் அரசு தங்கும் விடுதி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1,682 மாணவ, மாணவிகள் சேதுபந்தன ஆசனத்தை 3 நிமிடங்கள் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
உடல் நலம், மன நலம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக வாழும் கலை அமைப்பினர் தெரிவித்தனர்.
முன்னதாக, கின்னஸ் சாதனை முயற்சியை வாழும் கலை அமைப்பின் தமிழகம், புதுவை மாநில தலைமை ஆசிரியர் சுரேஷ் பாபு தொடக்கி வைத்தார்.
இதில் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்