அரசு ஊழியர்கள் - ஆசியரியர்கள் சங்கங்களின் (ஜாக்டோ- ஜியோ) கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பாக ஸ்ரீதர், சித்திக் கமிட்டிகள் அளித்துள்ள பரிந்துரைகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரின் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த லோகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் சித்திக் குழு அறிக்கை ஜன. 5 இல் தாக்கல் செய்யப்பட்டதால், அதுகுறித்து பரிசீலிக்க 2 நாள்கள் அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் 21 மாத நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பான சித்திக் குழுவின் அறிக்கையை புதன்கிழமை (ஜன.9) சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்தும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் குழுவின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜன. 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்