Friday, January 11, 2019

இன்ஜினியரிங் கல்லுாரிகளில் கலை, அறிவியல் படிப்புகள்?

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளை துவங்க, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





கடந்த சில ஆண்டுகளாகவே, நாடு முழுவதும், இன்ஜினியரிங் படிப்பின் மீதான விமர்சனம் அதிகரித்து வருகிறது. திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு, ஒரு பிரச்னையாகவே இல்லை என்றபோதிலும், இன்ஜினியரிங் படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப, போதிய திறன்களை இன்ஜினியரிங் பட்டதாரிகள் பெற்றிருக்கவில்லை என்றும் கருத்துக்கள், முன் வைக்கப்படுகின்றன.இவற்றை உணர்ந்தே, இன்ஜினியரிங் படிப்பின் தரத்தை மேம்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், ஏ.ஐ.சி.டி.இ.,யும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஒரே வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளையும் சேர்த்தே வழங்க அனுமதி அளிக்க, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





இத்தகைய முடிவு, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு சாதகமான நிலையாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த முடிவு, பெயரளவிலேயே தற்போது வரை உள்ளது.ஏனெனில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை.எனினும், இந்த திட்டம் ஏ.ஐ.சி.டி.இ.,யால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட்டால், கல்லுாரி நிர்வாகம், அனுபவமிக்க பேராசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்களை அமைக்க வேண்டுமென, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர், ஸ்ரீராம் கூறியதாவது:ஏ.ஐ.சி.டி.இ.,யின் இத்தகைய முடிவு வரவேற்கத்தக்கது.





இன்ஜினியரிங் படிப்பை, அறிவியல் அடிப்படையின்றி கற்க முடியாது.இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றின் மீதே பொறியியல் படிப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதால், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் அறிவியல் சார்ந்த பட்டப் படிப்புகள் வழங்குவது மிகச் சரியான முடிவு.ஆனால், அது மாணவர் சேர்க்கையின்றி தடுமாறும் பொறியியல் கல்லுாரிகளை காப்பாற்றும் நோக்கில் மட்டுமே இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.செண்டு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் கூறியதாவது:





ஒரே வளாகத்தில், கலை அறிவியல் படிப்புகளை, இன்ஜினியரிங் கல்லுாரிகள் வழங்கினால், இருபிரிவு மாணவர்களும் இணைந்து செயல்பட வழிவகுக்கும். ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பும், செயல்தன்மையும், ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட்ட பின், முழுமையான விபரம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி ஆலோசகர், நெடுஞ்செழியன் கூறியதாவது:இத்தகைய முடிவை, ஏ.ஐ.சி.டி.இ., மட்டும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. மாநில அரசுகள், பல்கலை மானியக் குழு, மாநில பல்கலை ஆகியவற்றின் அனுமதிக்கும் உட்பட்டதே.எனினும், இத்தகைய நோக்கத்தில் தவறில்லை. இன்ஜினியரிங்கல்லுாரிகளுக்கு இது சாதகமாகவே அமையும்.இவ்வாறு அவர் கூறினார். - கல்விமலர் நமது நிருபர்

Popular Feed

Recent Story

Featured News