Thursday, January 31, 2019

அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.



மதுரையை சேர்ந்த கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 50 கல்லூரிகள் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.தற்போது இக் கல்லூரிகளில் 2,500 விரிவுரையாளர் பணியிடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015-இல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. மேலும், கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்ட 3,544 பேரில் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்த கல்வித் தகுதிகளை 1,330 விரிவுரையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.



முறையான கல்வித்தகுதி இல்லாதவர்களால், மாணவர்களுக்கு சரியான கல்வியை கற்றுக்கொடுக்க முடியாது. கடந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகளில் 264 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதனால் விரிவுரையாளர்கள் பணி இடங்களும் அதிகரித்துள்ளன. எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை, யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.



மனுவை விசாரித்தநீதிபதிகள், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களைநிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Popular Feed

Recent Story

Featured News