Thursday, January 10, 2019

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் பயில்கின்ற மாணவர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்: முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.






விராலிமலை,ஜன.10:ஆசிரியர்கள் தங்களிடம் பயில்கின்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும் என தேர்ச்சி சதவீத பகுப்பாய்வுக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா முதுகலை ஆசிரியர்களை அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளை கையாளக்கூடிய தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,இயற்பியல்,வேதியியல்,உயிரியல்,தாவரவியல்,விலங்கியல் ,கணினி அறிவியல் பாடங்களை கற்பிக்கக்கூடிய முதுகலை ஆசிரியர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.





பகுப்பாய்வு கூட்டத்தினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்துப் பேசியதாவது: ஒவ்வொரு ஆசிரியரும் தங்களிடம் பயில்கின்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்.மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.தங்களிடம் பயிலும் அனைத்து மாணவர்களையும் தவறாது பள்ளிக்கு வர தலைமைஆசிரியர்கள் வழிகாட்டலுடன் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.மேலும் ஒவ்வொரு மாணவரின் திறனுக்கேற்ப மாணவர்களின் திறன் அறிந்து கற்றல் செயல்பாடுகளை வழங்க வேண்டும்.மேலும் திரும்ப திரும்ப பயிற்சிகள் வழங்கி மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதுடன் அவர்கள் உயர்ந்த இலக்கை அடைய சிறந்த வழிகாட்டியாக நீங்கள் திகழவேண்டும்.இவ்வாறாக மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் திகழும்போது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்த ஒவ்வொரு மாணவரும் உங்களை வாழ்க்கையில் மறக்கமாட்டார்கள்.குரு பார்த்தால் கோடி நன்மைகள் என்பார்கள்..அது போல ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்றார்.





பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் மெல்லக் கற்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிற ஆசிரியர்களிடம் குழுவாக கலந்துரையாடல் செய்தனர்.

கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர்( பொறுப்பு) இரா.சிவக்குமார்,விராலிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்,பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News