Friday, January 18, 2019

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் 2019-2020 ஆண்டுக்கான அனுமதியை புதுப்பித்துக் கொள்வதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜன.19) கடைசி தேதியாகும்.



நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) அனுமதி பெற்ற பின்னரே மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். அதுபோல, புதிதாகத் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிகளும் அனுமதி பெறவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூலமாகவே, கல்லூரிகள் விண்ணப்பிக்க வேண்டும்.




அந்த வகையில், 2019-2020 ஆம் ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகள் அனுமதி புதுப்பிப்பு மற்றும் புதிய பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் ஒருசில தினங்களில் முடிவடைய உள்ளது. 





தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க சனிக்கிழமை கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய நடைமுறை: 2019-2020 பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதியை, ஏஐசிடிஇ நிபுணர் குழு பரிந்துரைகளின் அடிப்படையிலேயே ஏஐசிடிஇ வழங்க உள்ளது.



இதில், கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை கேட்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு, அந்தந்த மாநில திறன், வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அனுமதி வழங்க வேண்டும். பாரம்பரிய துறைகளான இயந்திரவியல், மின் பொறியியல், கட்டடவியல், மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கூடுதல் இடங்கள் தருவதைத் தவிர்த்து, வளர்ந்து வரும் துறைகளான கணினி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம், இயந்திர மின் நுட்பவியல் துறைகளில் கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை நிபுணர் குழு சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News