Tuesday, January 8, 2019

மே இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் தேதி!






தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதியை வரும் மே மாதம் இறுதியில் அறிவிக்க இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 நவம்பர் 17ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர்களுக்கு எதிராகவும் திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.




இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன் நேற்று (ஜனவரி 7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வார்டு சுழற்சி, இட ஒதுக்கீடு பணிகள் 90 நாட்களில் முடிக்கப்படும். அதன்பின்னர் வரும் மே மாதம் இறுதி வாரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே 2017 நவம்பர் 17க்குள் தேர்தல் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த மனுவின் நிலை என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வார்டு வரையறை செய்தது தொடர்பான அறிக்கையையும் வரும் ஜனவரி 28இல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.




தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தாலும் தங்களுடையே குறைகளைக் கூறுவதற்கு ஒரு பிரதிநிதி இல்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர். தனி அலுவலகர்களின் பணி காலம் டிசம்பர் இறுதியுடன் முடிவடைந்த நிலையில், பணி நீட்டிப்பு மசோதா இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Popular Feed

Recent Story

Featured News