Thursday, January 17, 2019

நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது: கல்வித்துறை




அரசுப் பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், முதுநிலை ஆசிரியராக இருந்தால், 2003-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக 2013-இல் பதவி உயர்வு பெற்றவர்கள், இதற்கு விருப்பம் தெரிவிக்கலாம். மாவட்ட கல்வி அதிகாரியாக விரும்பினால், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு விருப்பம் தெரிவிக்கக் கூடாது. ஒரு பதவி உயர்வுக்கு, மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு, பதவி உயர்வுக்கு விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டுமென, சுற்றறிக்கை மூலம் இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.




மேலும் இந்தச் சுற்றறிக்கையில், 17-ஏ மற்றும் 17-பி என்ற, அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக, விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News