Thursday, January 17, 2019

`அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி தொடங்கட்டும்... ஆனால்..!' - கல்வியாளரின் வேண்டுகோள்


பிரபா கல்விமணி



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுக்கும் விதத்தில், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கவிருப்பதாக, தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைச் செயல்படுத்தும் விதமாக, சென்னை, எழும்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் வரும் 21-ம் தேதி, கே.ஜி வகுப்புகளைத் தொடங்கி வைக்கிவிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அரசுப் பள்ளியில் கே.ஜி வகுப்புகள் நடத்தப்படும் திட்டம் பற்றி மூத்த கல்வியாளர், பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் பேசினோம்.




``கல்வி தொடர்பான ஆய்வுக்காக அமைக்கப்பட்ட முத்துக்குமரன் கமிட்டி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கே.ஜி வகுப்புகள் தொடங்க வேண்டும் என்பதைக் கூறியுள்ளது. அதனால், தமிழக அரசின் இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதே. அங்கன்வாடிகளைப் பள்ளிகளோடு இணைப்பது போலத்தான் இது. மேலும், மாண்டிசோரி முறை பின்பற்றப்படும் என்று கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அப்படியெனில் மிகவும் நல்லது. இதில், நாங்கள் கூற விரும்புவது என்னவென்றால், இந்த வகுப்புகள் ஆங்கில வழியில் பாடங்களை நடத்தக் கூடாது. ஏனெனில், பல்வேறு ஆய்வுகளும் அறிஞர்களுமே தொடக்கக் கல்வி வரை தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்கிறார்கள். மாண்டிசோரி முறையில் பல இடங்களில் ஆங்கில வழியில்தான் நடத்தப்படுகிறது. தானே கற்றுக்கொள்ளும் விதத்திலும் தாய்மொழியிலும்தான் மழலை வகுப்புகள் கட்டாயம் இருந்தாக வேண்டும்.




Sponsored

மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற அளவில் அரசின் இந்தத் திட்டம் வருவதே சரி. ஏனெனில், ஒரே வளாகத்தில் நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் இந்த கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படுவது சரியானது அல்ல. பெரிய பிள்ளைகளும், இந்தச் சின்னஞ்சிறிய குழந்தைகளும் ஒரே வளாகத்தில் கற்க முடியாது. இருவருக்குமான கற்றல் சூழல் என்பது வேறு வேறு. அடுத்து, மழலையர்களைக் கையாளப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இந்த வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும் அல்லது அந்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். தமிழக அரசு இவற்றையும் கணக்கில் கொள்ளும் என நம்புகிறேன்" என்கிறார் பேராசிரியர் பிரபா கல்விமணி.



தமிழ்க்கடல் கல்விச் செய்திகளை உங்கள் WhatsApp குழுவில் பெற இணைவீர்: Click Here
தமிழ்க்கடல் கல்விச் செய்திகளை உங்கள் Facebook குழுவில் பெற இணைவீர்: Click Here

Popular Feed

Recent Story

Featured News