Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் (ஜனவரி 8, 9) இருபது கோடி தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாகத் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
“இந்த அரசுக்கு எதிரான அரசு ஊழியர், தொழிலாளர்களின் மிகப்பெரிய போராட்டம் இது. பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இருபது கோடி பேர் நாடு முழுவதும் இதில் பங்கேற்கிறார்கள்” என்று சிஐடியு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான டபான் சென் தெரிவிக்கிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பாரதிய மஸ்தூர் சங் தவிர மீதமுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்கின்றன.
அமைப்பு சாரா தொழிலாளர்களோடு வங்கி ஊழியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குடி தண்ணீர், மின்சாரம், அஞ்சல் துறை, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, நிலக்கரி, இரும்பு உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் இந்த இரு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த இரு நாட்கள் வேலைநிறுத்தம் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால் வேலையின்மை அதிகரித்துள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. விலைவாசி உயர்வு அனுதினமும் அதிகரித்துவருகிறது. விவசாயிகள் வாழ்வு நொறுங்கிப்போயுள்ளது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மோடி அரசு மறுக்கிறது. விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை என்பது கனவாகவே உள்ளது.
இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்கள், விவசாயிகளது கோரிக்கைகளை வலியுறுத்தியும் (ஜனவரி 8 - 9) சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், தொமுச, ஏஐசிசிடியு, டியுடிசி உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், துறைவாரி சங்கங்களும் ஒருங்கிணைந்து 48 மணி நேர அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன. நாடு முழுவதும் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இன்றும் நாளையும் நடைபெறுகிற நாடு தழுவிய போராட்டத்தில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்களும் பங்கேற்கவுள்ளதாக ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை நேற்று (ஜனவரி 7) அனைத்து தொடக்க கல்வி அலுவலகர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அரசு நிர்வாகத்தைப் பாதிக்கும் வகையில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவது விதிமுறையை மீறும் செயலாகும். வேலைநிறுத்த நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது. அன்றைக்குப் பணிக்கு வராதவர்கள் பட்டியல் 10.30 மணிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு, எச்சரிக்கையை மீறி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என தமிழக தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்கவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களையும், தொழிலாளர்கள், பொது மக்களையும் மிரட்டும் வகையில் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை விடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறியிருக்கிறார் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
“நடைபெறும் இந்தப் போராட்டங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பேராதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், வாலிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப்பகுதி மக்களையும் திரட்டி வெற்றிகரமாக இந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் இந்த இரண்டு நாட்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளும் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று எச்சரித்திருக்கிறார். தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும்கூட அதிகாரிகள் மூலமாக அரசு ஊழியர்கள் அச்சுறுத்தப்படுவதாக அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.