Monday, January 14, 2019

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை மீறி, அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்புகளை, கல்வித்துறை துவங்குவதாக, ஆசிரியர்கள் புகார்

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை மீறி, அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்புகளை, கல்வித்துறை துவங்குவதாக, ஆசிரியர்கள் புகார்
தெரிவித்துள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடிகளுக்கு பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், ஆறு வயதுக்கு மேல், மாணவர்களை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தான், கேந்திரிய வித்யாலயா உட்பட மத்திய அரசு பள்ளிகளில், முன்மழலையர் வகுப்புகள் துவங்கப்படவில்லை.ஆனால், தமிழகத்தில் இச்சட்டத்தை மீறி, 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளில், முன்மழலையர் வகுப்புகள் வரும், 21ம் தேதி முதல் துவங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்றரை வயது முதலான குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தனியார் முன்மழலையர் பள்ளிகளுக்கு, அரசு 43 வகை வரன்முறைகள் விதித்துள்ளது. இதன்படி, 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்; இரு நுழைவாயில்கள் இருக்க வேண்டும்.



ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி வீதம், வகுப்பறை இருப்பது அவசியம்.சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல், விளையாட்டு மைதானம், கழிவறை வசதி கொண்டதாக பள்ளி சூழல் இருக்க வேண்டும். இதை பூர்த்தி செய்யாத கல்வி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதில்லை.இந்த விதிமுறைகளின்படி பார்த்தால், அரசின் அங்கன்வாடிகளில் மேற்கண்ட வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.அடிப்படை வசதிகளற்ற இம்மையங்களில், முன்மழலையர் வகுப்புகள் துவங்குவது, விதிமுறை மீறல் என, தனியார் பள்ளிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகள், அரசுப்பள்ளிகளுக்கு பொருந்தாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இம்மாணவர்களுக்கு பிரத்யேக பாடப்புத்தகமும் விநியோகிக்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்களை பணியிடத்தோடு, அங்கன்வாடிகளுக்கு மாறுதல் செய்வதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆராயாமல், கல்வித்துறை நடைமுறைப்படுத்த முனைவதாக புகார் எழுந்துள்ளது.



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், ''அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு, பள்ளிப்படிப்பு நிறைவு செய்வதே கல்வித்தகுதியாக உள்ளது. ஆனால், இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க வகுப்புகள் கையாளும், கல்வித்தகுதி கொண்டவர்கள். இவர்களை, பணியிறக்கம் செய்வது போல, எவ்வித பயிற்சியும் அளிக்காமல், அங்கன்வாடிகளில் பணிக்கு அமர்த்துவதில் உடன்பாடு இல்லை.பணியிடத்துடன் சமூகநலத்துறைக்கு செல்லும் ஆசிரியர்கள், மீண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் வாய்ப்புகள் குறைவு. எனவே, அரசு இத்திட்டத்தை மறுஆய்வு செய்து, முன்மழலையர் வகுப்புகளுக்கு பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்,'' என்றார்.



'கட்டமைப்புடன் துவங்கலாம்'தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில்,''அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்பு துவங்க, போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. பத்துக்கு பத்து அடி நீள, அகலமுள்ள அறையில் தான், பெரும்பாலான மையங்கள் செயல்படுகின்றன. இதற்கு அருகிலே சமையலறை உள்ளது. இங்கு முன்மழலையர் வகுப்பு துவங்குவது, அரசு வகுத்த விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. போதிய கட்டமைப்பு வசதிகளுடன் இத்திட்டத்தை அமல்படுத்தலாம்,'' என்றார்

Popular Feed

Recent Story

Featured News