இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐஐடி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்(ஐஐஎஸ்இஆர்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகத்துக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் வழிகாட்டியாக செயல்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் மாநாட்டின் ஒருபகுதியாக விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. அதை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில் கணிதம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆரம்ப பள்ளிக்கல்வியில் இருந்தே மாணவர்களுக்கு ஆராய்ச்சி குறித்து கற்பிக்க வேண்டும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் மாணவர்கள் மத்தியில் கடினமான பாடத்திட்டங்கள் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அந்த பாடங்களில் பின்தங்கிய மாணவர்கள், அதன் பின்னர் மற்ற உயர்கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கணிதப்பாடத்தை மிகவும் சுவாரஸ்யமாக கற்பிக்கலாம். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கு பெரிதாக எந்த உபகரணமும் தேவையில்லை. எளிமையான உத்திகளே போதுமானவையாக இருக்கும். அதனால் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
மாணவர்களின் இந்த பிரச்னையை தீர்க்கும் வகையிலும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலும், ஐஐடி, ஐஐஎஸ்இஆர் மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் வழிகாட்டியாக செயல்படும். இந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள 10-15 பள்ளிகளுக்கு அந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பர். கணிதம், அறிவியல் பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி வழங்கப்படுகிறது என்பதை இந்த கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த முடிவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.
ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்: நாட்டில் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் பல புத்தாக்க மையங்கள் உருவாக்கப்பட்டன. கல்லூரி மாணவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் வகையில், அவர்கள் விடுதியறையிலேயே நிறுவனங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டன.
இந்திய பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தற்போது 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சித் துறையில் இந்தியா மேலும் வளரும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பள்ளிகளிலும், ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு விரைவில் கொண்டுவரப்படும் என்று ஜாவடேகர் கூறினார்.