Thursday, January 17, 2019

School Morning Prayer Activities - 18.01.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:




திருக்குறள் : 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.





உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி:

Good clothes open all door

ஆடை இல்லாதவன் அரை மனிதன்

பொன்மொழி:

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை.

-வோல்டன்


இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :
1) ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
வோலடைல்.

2) தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
கங்காரு , எலி

நீதிக்கதை :






இரண்டு நண்பர்களும் கரடியும்.
-
பூஞ்சோலை என்ற ஊரில் ராமு சோமு என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர்.அவர்கள் இருவரும் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் ராமு நண்பனிடம் அடுத்துள்ள நந்திவனம் என்ற பெரிய ஊருக்கு வேலைதேடிச் செல்லலாம் என்று யோசனை கூறினான்.சோமுவும் சம்மதித்தான். அந்த ஊரின் எல்லையில் ஒரு பெரிய காடு இருந்தது.அந்தக் காட்டைக் கடந்துதான் நந்திவனத்துக்குச் செல்லவேண்டும்.
ஒருநாள் அதிகாலையில் இருவரும் புறப்பட்டனர்.இருவரும் கையில் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு கையில் ஒரு கம்புடனும் புறப்பட்டனர்.பேசிக்கொண்டே வழிநடந்தனர். சூரியன் உச்சியில் சுள்ளென்று அடித்தது.இருவருக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது. இன்னும் சிலகாததூரம் செல்லவேண்டும். உட்கார்ந்து ஓய்வெடுத்தபின் செல்லலாம் என்று எண்ணினான் சோமு.
"ராமு ரொம்பப் பசிக்கிறது காலெல்லாம் வலிக்கிறது சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லலாம்."
"அய்யோ சோமு நாம் காட்டின் நடுவில் இருக்கிறோம்.இங்கே கரடி நரி ஏன் புலிகூட வரலாம்.சீக்கிரம் ஊரின் அருகே சென்று விடலாம் அங்கே காட்டு விலங்குகள் வராது.வா சீக்கிரம் போகலாம்."
"பயப்படாதே ராமு நான் சிலம்பம் கற்றிருக்கிறேன்.எந்த விலங்கையும் சமாளிக்கும் திறமை இருக்கிறது. எந்த சமயத்திலும் உன்னை நான் காப்பாற்றுவேன்.இப்போது சாப்பிடலாம் வா."
நண்பன் சோமு சொன்ன வார்த்தைகளால் சற்று தைரியம் அடைந்த ராமு எங்காவது குளம் குட்டை ஏதாவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தான்.





"ராமு வரும் வழியில் குளிர்ந்த காற்று அடித்ததே அங்குதான் அருகில் ஏதாவது குளம் இருக்கும்." என்றபடியே நடந்தான் சோமு.அவன் சொன்ன படியே அருகில் ஒரு குளம் இருந்தது.
இருவரும் சோற்று மூட்டையைப் பிரித்து உண்ணத் தொடங்கினர்.அதற்குள் வானத்தில் கருமேகங்கள் திரண்டு, காற்றும் வீசியது.காடும் இருண்டு காட்சியளித்தது.
இருவரும் வேகமாக சாப்பிட்டு முடித்தனர்.ராமு பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.
"வா,வா, சீக்கிரம் போய்விடலாம் "என்று அவசரப்பட்டான்.
"நீ ஏன் இப்படிப் பயப்படுகிறாய்?நான் இருக்கிறேன் என்று சொல்கிறேனே."என்ற சோமு அவன் தோளில் கை போட்டு சிரித்தபடி நடந்தான். சற்று நேரத்தில் ராமு பயம் தெளிந்து சிரித்தான்.பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் இருள் லேசாகக் கவிழ்ந்தது கூடத்தெரியவில்லை.
திடீரென்று ராமு நின்றான்.
"ஏன் ராமு ஏன் பயப்படுகிறாய்?"
"ஏதோ சத்தம் கேட்கிறது.உனக்கு கேட்க வில்லையா?"
சோமு சற்று கூர்ந்து கவனித்தான் அப்போது அருகே புதரில் சளசளவென்ற சத்தம் கேட்கவே அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடத தொடங்கினான். அந்தப் புதருக்குள்ளிருந்து ஒரு கரடி மெதுவாக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது தான்
காரணம்.இதைப் பார்த்த ராமு





"சோமு, சோமு" என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான்.ஆனால் சோமுவோ அருகே இருந்த ஒரு மரத்தில் ஏறி மறைந்து கொண்டான்.
கரடியோ ராமுவை நெருங்கிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று அறியாது திகைத்தவனுக்கு தான் படித்தது நினைவுக்கு வந்தது. இறந்தவர்களைக் கரடி தின்னாது . அடித்துக் கொன்றுதான் தின்னும் என்ற செய்திதான் அது.
உடனே சட்டென்று கீழே படுத்து மூச்சை அடக்கிக் கொண்டான்.இறந்தவன் போலக் கிடந்தான். கரடி படுத்துக் கிடந்த ராமுவை முகர்ந்து முகர்ந்து பார்த்தது பின்னர் அவனை விட்டு விலகிச் சென்று விட்டது கரடி போய்விட்டதை அறிந்து சோமு மெதுவாக மரத்தைவிட்டுக் கீழே இறங்கினான்.ராமுவின் அருகே வந்து அவனிடம்
"நண்பா, கரடி உன் காதில் என்னவோ சொல்லிற்றே, என்ன அது?"என்றான் தயங்கியபடியே.
அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ராமு,,"அதுவா, ஆபத்தில் உதவாத நண்பனுடன் சேராதே.அவனால் உனக்கு ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனது."என்றான்.
இதைக்கேட்டு வெட்கத்தில் தலை குனிந்து நடந்தான் சோமு.
ராமுவும் பின்தொடர்ந்து நடந்தான்.
எந்த நேரத்திலும் நம் நண்பர்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்.





இன்றைய செய்தி துளிகள் :


1) அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, செருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2) வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

3) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

4) எம்ஜிஆர் உருவம் பொதித்த சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

5) மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னனி நட்சத்திரங்களான சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News