Monday, February 4, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு : மாணவர்களுக்கு நகல் வழங்க உத்தரவு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பை, மாணவர்களுக்கு நகல் எடுத்து வழங்கும்படி, பள்ளிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அடுத்த மாதம் பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 2வுக்கு, புதிய தேர்வு முறை அறிமுகமாகிறது. இதன்படி, ஒவ்வொரு பாடத்திற்கும், இதுவரை, 200 மதிப்பெண்ணிற்கு நடந்த தேர்வு, இந்தாண்டு முதல், 100 மதிப்பெண்ணிற்கு நடத்தப்படுகிறது.



இணையதளம்

மொழி பாடம், முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கான தேர்வு, இந்தாண்டு முதல், ஒரே தாளாக நடத்தப்படுகிறது. பிளஸ் 1 வகுப்பை பொறுத்தவரை, புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு மாற்றங்களுடன் இந்த ஆண்டு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், புதிய வினாத்தாள் எப்படி இருக்கும் என, ஜன., 3ல் தேர்வு துறை இயக்குனரகம், வினாத்தாள் வடிவமைப்பை வெளியிட்டது.தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், வினாத்தாள் முறை பதிவேற்றம் செய்யப்பட்டது.இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, தேர்வு வடிவமைப்பை தெரிவிக்க, தேர்வு துறை உத்தரவிட்டது.



அறிவிப்பு

ஆனால், பல பள்ளிகளின் மாணவர்களுக்கு, தேர்வு வடிவமைப்பு முறை தெரியவில்லை என, பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'பிளஸ் 1, பிளஸ் 2 புதிய வடிவமைப்பு வினாத்தாள், தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'அதை, ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுத்து, உரிய பயிற்சியை அளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News