ஜாக்டோ–ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் எடுக்கப்பட்ட 1,584 ஆசிரியர்கள் மீதான பணி இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.பணி இடைநீக்கம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த மாதம் 22–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
முதல்–அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, 9 நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 1,584 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுமட்டுமில்லாமல், சில ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ரத்து
இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக 1,584 ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட பணி இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘மாணவர்கள் நலன் கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.வரவேற்கிறோம் இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது குறித்து ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள் மீதான பணி இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்து இருப்பதை வரவேற்கிறோம். அதேபோல், ஒரு பள்ளியில் கடந்த ஓராண்டாக பணியாற்றி, மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து, தேர்வுக்கு தயார்படுத்தி இருக்கும் ஆசிரியர்கள் சிலரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக இடமாற்றம் செய்து இருக்கிறார்கள்.
எனவே மாணவர்கள் நலன் கருதி அந்த ஆசிரியர்கள் மீதும் எடுக்கப்பட்ட பணிமாறுதல் நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையையும், காவல் துறையில் ஆசிரியர்கள் மீது பதியப்பட்டு இருக்கும் வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அரசு அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.