Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 9, 2019

2 வருடங்களில் 3,300 பேருக்கு வேலை... Job Offers வாட்ஸ்அப்பில் கலக்கும் புதுச்சேரி இளைஞர்! 3,300 people work in 2 years.

2 வருடங்களில் 3,300 பேருக்கு வேலை... வாட்ஸ்அப்பில் கலக்கும் புதுச்சேரி இளைஞர்! 3,300 people work in 2 years
அரசு வேலை வாய்ப்பகங்களின் செயல்பாடுகள் குறைந்து, அதன் நோக்கம் கரைந்து முழுதாக இரண்டு தலைமுறைகள் ஓடிவிட்டன. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டிய அதன் அதிகாரிகள், வெறும் அரசு ஊழியர்களாக மட்டுமே அங்கே உலா வருகின்றனர். விளைவு, `கன்சல்டன்சி' என்ற பெயரில் வீதிக்கு ஐந்து தனியார் வேலை வாய்ப்பகங்கள் முளைத்து இளைஞர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.
தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க ஆர்வம் காட்டும் அரசு, அதில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை


உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் கல்விக் கடன், கந்துவட்டி என வாங்கிப் படித்துவிட்டு வேலை கிடைக்காமலும், வாங்கிய கடன்களை அடைக்க முடியாமலும் திணறிக் கொண்டிருக்கின்றனர். அதில் பலர் சமூக விரோதிகளுடன் கைகோத்துவிடும் அவலமும் அரங்கேறிவிடுகிறது. இப்படியான சூழலில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல், வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வழியாக வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உதவி வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் வீரராகவன். இவர் நடத்தி வரும் `வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை மையம்' என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 3,300 பேருக்கு வேலை வாய்ப்பை அளித்திருக்கிறார். மத்திய அரசின் தேசியத் திறன் மேம்படுத்தும் திட்டம் ஒன்றில் இணை நிலை பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் அவரை பாகூரை அடுத்த அரங்கனூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். ``சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் எம்.பி.ஏ முடித்தேன்.



மூன்று வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வந்தேன். சில கசப்பான அனுபவங்களால் அந்த வேலையைத் தொடர முடியாமல் விட்டுவிட்டேன். புதிய வேலை கிடைக்காதது ஒருபுறமிருக்க, Job Offers வேலை எங்கு காலியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக நேரம் விரயமானது. இப்படி மூன்று மாதங்கள் வீட்டிலேயேதான் இருந்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. தனியார் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளாக வேலை செய்துகொண்டிருந்த எனது நண்பர்கள் சிலரை வைத்து ஒரு குழுவை உருவாக்கினேன். அதில் அவர்களுக்குத் தெரிந்து வேலை காலியாக


இருக்கும் இடங்களைப் பகிர்ந்ததால் ஒரே வாரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக வேலையில் சேர்ந்தேன்.
இந்தக் காலத்தில் அனைவரது கையிலும் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கின்றன. அதன் மூலம் வேலை வாய்ப்புச் செய்திகளை எளிதாக அவர்களின் கைகளுக்கே நேரடியாக அனுப்ப முடியும் என்பதால் அதைச் செய்ய முடிவெடுத்தேன். எனக்காக உருவாக்கிய குழுவில் நான் உட்பட 15 ஹெச்.ஆர்கள் இருந்தோம். 'புதுவை இளைஞர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு சேவை இயக்கம்' என்ற பெயரில் மற்றொரு குழுவை உருவாக்கி அதில் எனக்குத் தெரிந்த வேலையின்றி இருக்கும் இளைஞர்களை இணைத்தேன். எனது ஹெச்.ஆர் நண்பர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் தேவைப்படும் ஆட்கள், பதவியின் பெயர், கல்வித் தகுதி, அனுபவம் போன்ற விவரங்களை எங்கள் குழுவில் பதிவிட்டார்கள்.




இந்த விவரங்களோடு நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றோடு `புதுவை இளைஞர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு சேவை இயக்கம்' குழுவிலும், அதே பெயரில் ஆரம்பித்த முகநூல் குழுவிலும் நான் அன்றாடம் பதிவிட்டேன். தொடங்கிய முதல் நாளிலிருந்தே எனது இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. குழுவில் இருந்தவர்கள் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு நேர்முகத் தேர்வின் மூலம் வேலையில் சேரத் தொடங்கினார்கள். நான் போட்ட பதிவின் மூலம் எத்தனை பேர் தொடர்பு


கொள்ளத் தொடங்கினார்கள். அதில் எத்தனை பேரை வேலைக்கு எடுத்தார்கள் என்ற தகவல்களை நிறுவன நிர்வாகம் கொடுத்துவிடும். இது தவிர சமூக நோக்கங்களைக் கொண்டு இயங்கும் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களின் அட்மின்களும் எங்கள் 'ஆதரவாளர்கள்' குழுவிலிருந்து அவர்களும் அந்தத் தகவலை பகிர ஆரம்பித்தார்கள்.
பன்முகத் திறமைகள் கொண்ட நபர்கள் உடனுக்குடன் கிடைத்ததால் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதன் மூலம் இரு தரப்பினருக்குமே தனியார் கன்சல்டன்சிகளுக்கு செலவழிக்கும் பணம் மிச்சமானது. சிறிது நாள்களில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களே, என்னை நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களிடம் காலியாக உள்ள இடங்களையும், அதற்கான தகுதிகளையும் கூறத் தொடங்கினார்கள். தற்போது ஹெச்.ஆர் மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்காக மட்டும் நான்கு குழுக்கள் இருக்கின்றன. அதேபோல வேலை தேடும் ஆண்களுக்கு 11 குழுக்களும், பெண்களுக்கு 4 குழுக்களும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. முதலில் கம்பெனிகள் தரும் தகவலை அப்படியே அனுப்பியதில் பல்வேறு கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது.



இரவு 11 மணிக்கெல்லாம் கம்பெனித் தரப்பினரைத் தொடர்பு கொண்டு வேலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதன்பிறகுதான் அதற்காகத் தனியாக நானே ஒரு விளக்க அட்டவணையை உருவாக்கி, எத்தனை மணி வரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று விளக்கத்தைச் சேர்த்து பதிவிட ஆரம்பித்தேன். விழுப்புரம், கடலூர் பகுதி இளைஞர்களும் குழுவில் இணைய ஆரம்பித்ததால் 'வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை மையம்' என்று பெயரை மாற்றினேன். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை நான்கு வேலை வாய்ப்பு முகாம்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். வேலை தேடும் இளைய தலைமுறையினருக்கு நம்மால் முடிந்தவரை வழிகாட்டுகிறோம் என்ற மன திருப்தி இருந்தாலும், இதில் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. `நீங்கள் இலவசமாகச் செய்வதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என்று தனியார் கன்சல்டன்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன. அவர்கள் கூறுவது ஒரு வகையில் சரி என்றாலும், என்னைப் போல நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த வேலையில்லாத ஒருவர் வேலை தேடுவதற்காக பணம் செலவு செய்ய முடியாது என்பதையும் உணர்ந்தவன் நான். அதேபோல சில முக்கியப் புள்ளிகள் தொடர்பு கொண்டு `நம்மாளு 30 பேரு இருக்கான்.



அவனுங்களுக்கு அந்த நிறுவனத்தில் சிபாரிசு பண்ணித் தள்ளி விடு' என்றும் கூறுவதும் உண்டு. அப்படிச் செய்ய முடியாது என்பதை விளக்கினாலும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். நான் வேலையை விட்டு வந்ததும் நிறுவன மெயில்களைப் பார்த்து விளக்க அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். குடும்பத்தினரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவையெல்லாம் சில நேரங்களில் என்னைச் சோர்வடைய வைத்தாலும், ஆயிரக்கணக்கான என் தம்பிகளும், தங்கைகளும் வேலை தேடித் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் களைப்பைப் போக்கி சுறுசுறுப்பாக்கிவிடும். ஆனாலும் என் தனி ஒருவனால் இந்த மாபெரும் பொறுப்பைத் தொடர்வது சிரமம் என்று எனக்குத் தோன்றியது. அதனால் சேவை மனப்பான்மையோடு அரசியல் பின்னணி இல்லாத நண்பர்களைத் தேடினேன். அப்படிக் கிடைத்தவர்கள்தான் மகேந்திர வேலன், பாலமுரளி கிருஷ்ணா, காயத்திரி, ரவிவர்மன், ஸ்ரீப்ரியா, வசந்தகுமார் ஆகியோர். கடந்த இரண்டு மாதங்களாக என்னுடன் இணைந்து பயணிக்கிறார்கள்.



நிறுவனங்களின் ஹெச்.ஆர்களைத் தொடர்பு கொள்வது, புதிய நிறுவனங்களை அணுகி குழுவிற்குள் கொண்டு வருவது, வேலை வாய்ப்பு முகாம்களை ஒருங்கிணைப்பது, விளக்க அட்டவணை தயாரிப்பது, வேலை தேடும் ஆண்களைக் கையாள ஒருவர், பெண்களைக் கையாள ஒருவர் எனத் தனித் தனியே பொறுப்புகளை பிரித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். நாங்கள் எவ்வளவு விருதுகள் வாங்கினாலும், 'சார், எனக்கு வேலை கிடைச்சிடுச்சி'னு வரும் ஒரு போன் கால்தான் எங்களுக்கு விலை மதிப்பில்லா விருது" என்கிறார் கண்கள் மிளிர. நம் கையில் இருப்பது வெறும் ஆண்ட்ராய்டு போன் மட்டுமல்ல, எல்லைகள் கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அறிவியல் ஆயுதம் என்பதை நிரூபித்திருக்கும் வீரராகவனைப் போன்றவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.


கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்