Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 12, 2019

மர வளத்தை பெருக்கும் புதிய திட்டம்: 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்

ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது.
மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வனத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளும் இப்பணியில் ஈடுபட்டு, பங்களிப்பை அளித்து வருகின்றன.



இந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஒரு நல்ல திட்டத்தை தீட்டி இருக்கிறார்.
இந்த திட்டத்தின்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். இதில் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு, 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட வேண்டும்.
இந்த மரக்கன்றை மாணவர்கள் தங்கள் வீட்டின் வளாகத்திலோ, சொந்த நிலங்களிலோ, பள்ளி வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ நட்டு ஒரு ஆண்டு அதனை பராமரிக்க வேண்டும்.


அப்படி 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை முழுமையாக நிறைவேற்றும் மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் ஆறு பாடங்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடனேயே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர மாணவர்களுக்கு மர வளத்தின் நன்மை, மரக்கன்று நட்டு பராமரிப்பது, மர வளத்தை பெருக்குவதின் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு, மரங்களினால் உண்டாகும் மழை வளம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கலாமா? என்றும் பள்ளி கல்வித்துறை தீவிரமாக பரிசீலித்து வரு கிறது.