ராமேசுவரத்தில் 2019-20 கல்வியாண்டில் குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுதல், தொழில் கல்லூரிகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துதல் போன்ற திட்டங்களுக்காக ரூ. 4,584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினரும் குறைந்த செலவில் தரமான உயர் கல்வி பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில், 2018-19 ஆம் ஆண்டில் மூன்று பாலிடெக்னிக் கல்லூரிகளும், 29 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.
அதுபோல, 2019-20 ஆம் ஆண்டில் ராமேசுவரத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்துக்காக 2019-20 கல்வியாண்டில் ரூ. 460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலை.க்கு ரூ. 250 கோடி: பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்திலுள்ள பிற பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் சேர்த்து ரூ. 288.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.க்கு ரூ. 100 கோடி: உயர் தொழில்நுட்பத் திறன்களும், சிறப்புத் தகுதிகளும் கொண்ட பணியாளர்களுக்கானத் தேவையைக் கருத்தில் கொண்டு, தொழில் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் உபகரணங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ரூ. 100 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
இதுபோல பல்வேறு திட்டங்களுக்காக 2019-20 நிதிநிலை அறிக்கையில் உயர் கல்வித் துறைக்காக ரூ. 4,584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.