Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 10, 2019

5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்த பரிசீலனை: அமைச்சர்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்த அலங்கார நுழைவு வாயில் கடந்த ஆண்டு வாகனம் மோதி இடிந்துவிட்டது. இதனால் தற்போது ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலங்கார நுழைவு வாயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், நாடார் மகாஜன பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர்.



இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி நுழைவு அலங்கார வளைவில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு கண்டிப்பாக இடம் பெறும். காமராஜருக்குப் புகழ் சேர்க்கும் விதமாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காமராஜரின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மார்ச் மாத இறுதிக்குள் மாநிலத்தில் உள்ள 1500 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில்
அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.



மாணவர்களின் வருகைப் பதிவேடு பயோமெட்ரிக் முறையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசின் நிதி நிலையைப் பொறுத்து படிப்படியாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிகளுக்குத் தனியாக துப்புரவுத் தொழிலாளர்களை அமர்த்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாநில அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்றார்.