Monday, February 4, 2019

5, 8ம் வகுப்புகளுக்கான 'ஆல் பாஸ்' திட்டம்; நிபுணர் கருத்தை கேட்க அரசு முடிவு




கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்ற பொது கல்வி வாரியத்தை கூட்டி தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது. 'மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 14 வயது வரை இலவச கல்வி வழங்க வேண்டும்' என அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இந்த சட்டத்தை பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 'பாஸ்' செய்யப்பட்டனர். இந்த 'ஆல் பாஸ்' முறையால் ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு வரும் பல மாணவர்கள் அவரவர் மாநில மொழி அல்லது தாய்மொழியில் கூட எழுதப் படிக்க தெரியாமல் திணறுகின்றனர். இது குறித்து மத்திய அரசு தரப்பில் நிபுணர் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது.



ஆய்வின் முடிவில் எட்டாம் வகுப்பு வரையிலான ஆல் பாஸ் திட்டத்தை நிறுத்த பரிந்துரை செய்யப்பட்டது. இது குறித்து மத்திய அரசின் சார்பில் சட்ட திருத்த மசோதா உருவாக்கி ஜனவரி 2ல் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. சட்ட திருத்தத்துக்கான மத்திய அரசின் அரசாணை கடந்த வாரம் வெளியானது. அதில் தேர்வே நடத்தாமல் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற வைக்கக்கூடாது. இந்த இரு வகுப்புகளிலோ அல்லது எட்டாம் வகுப்பிலோ மட்டுமே ஆண்டு இறுதி தேர்வை நடத்த வேண்டும்.



இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு பயிற்சி அளித்து அவர்களுக்கு மீண்டும் ஒரு துணை தேர்வு நடத்தி தேர்ச்சி அளிக்க வேண்டும். இது குறித்து அந்தந்த மாநிலங்கள் உரிய முடிவுகளை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பொது கல்வி வாரியம் மற்றும் பாடத் திட்டத்துக்கான உயர் மட்டக் குழுவை கூட்டி நிபுணர்களின் கருத்துகளை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் 'ஆல் பாஸ்' முறையை ரத்து செய்வதா தொடர்வதா என முடிவு செய்யப்படும் என பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

Popular Feed

Recent Story

Featured News