Tuesday, February 19, 2019

நீட் தேர்வுக்காக 550 மையங்கள் தயார்!' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

`தமிழகத்தில் நீட் தேர்வுக்காக மத்திய அரசு கோரிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் 550 மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
அதனால் ஒரு மாணவர் கூட வெளிமாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்படாது' என நெல்லையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நெல்லை மேலப்பாளையத்தில் தனியார் பள்ளி விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அத்துடன் மின் மிகை மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.



தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவிலேயே தமிழகம்தான் சிறந்த வழிகாட்டும் மாநிலமாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 16,000 மாணவர்கள் 413 மையங்களில் நீட்தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் முதல் மதிப்பெண் எடுக்கும் 4,000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளுடன் 10 கல்லூரிகளில் 25 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


நீட் தேர்வைப் பொறுத்தவரையிலும் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டு தமிழகத்துக்கு உள்ளேயே அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். மத்திய அரசு கேட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 550 மையங்கள் தயார்நிலையில் உள்ளன. எனவே ஒரு மாணவர் கூட வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. அடுத்த வாரத்துக்குள் 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
8-வது, 9-வது மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளோம் அதற்கான ஒப்புதல் கிடைத்து விட்டால் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நாடு முழுவதும் பொறியியல் கல்வி முடித்தவர்கள் 80 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் 1,60,000 பேர் பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள்.


இந்த நிலையைத் தவிர்க்க 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 13 திறன் வளர்ப்புப் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வந்தபின்னர் ஆடிட்டர் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறது. தமிழகத்திலும் ஆடிட்டர் வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் 12-ம் வகுப்பில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சி.ஏ படிப்புக்கான சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News