Join THAMIZHKADAL WhatsApp Groups
சட்டப் பேரவையில் அரசின் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்த அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்டு பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
கஜா புயல் தாக்கம், கடுமையான வறட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சிறப்பு நிதியுதவியாக இந்த ஆண்டில் மட்டும் வழங்கப்படும் எனவும் அவர் அறிவிப்புச் செய்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை படித்தளித்த அறிக்கை:-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடந்து வரும் தமிழக அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
60 லட்சம் குடும்பங்கள்: பல மாவட்டங்களில் கஜா புயல் தாக்கம், பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் ஏழை-எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலாரூ.2 ஆயிரம் அளிக்கப்படும்.
அதன்படி, விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி, விசைத்தறி, கைத்தறி, கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவு, மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும்.
நகர்-கிராமப்புறங்கள்: இந்த அறிவிப்பால், கிராமப்புறங்களில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும் என மொத்தம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவியைப் பெறுவர். இதற்கென, ரூ.1,200 கோடி நிகழ் நிதியாண்டின் (2018-19) துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தேர்தலுக்கு முன்பாகவே.
சிறப்பு நிதியுதவி அளிப்பதற்கான நிதி ஒதுக்கீடு நிகழ் நிதியாண்டிலேயே செய்யப்பட உள்ளது. இதனால், மார்ச் மாதத்துக்குள்ளாக 60 லட்சம் பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் கிடைக்கும். இந்தத் தொகையானது உரிய கணக்கெடுப்புக்குப் பிறகு, அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், இதுகுறித்து பிறப்பிக்கப்படும் அரசு உத்தரவில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட உள்ளன. மத்திய அரசின் அறிவிப்பு. தமிழகம் உள்பட இந்திய அளவில் 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தைச் சேர்ந்த சிறு-குறு விவசாயிகள் சுமார் 70 லட்சம் பேர் நிகழ் நிதியாண்டின் மார்ச் மாதத்துக்குள்ளாக முதல் தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம் பெற உள்ளனர்.
இதன்மூலம், தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவியை சுமார் 1.3 கோடி குடும்பங்கள் பெற உள்ளன.
விவசாயிகளுக்கு மத்திய அரசின் தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகையும், இதர ஏழை-எளிய மக்களுக்கு தமிழக அரசின் தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவியும் அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.