Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 10, 2019

கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி


கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதால், மாணவர் வருகைப்பதிவை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.

தமிழக பள்ளிக்கல்வி துறையில் தேர்வுமுறை, பாடத்திட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.

இந்த செயலியை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கு தரப்பட்ட பதிவெண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் வருகைப்பதிவை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி காலை 9.30 மற்றும் மதியம் 1.30 மணிக்கு மாணவர் வருகை விவரங்கள் செல்போன் செயலி மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.




இதேபோல் காலை 10 மணிக்குள் ஆசிரியர் வருகை மற்றும் சத்துணவு விவரப்பட்டியலை தலைமையாசிரியர் அனுப்ப வேண்டும்.

இந்த தகவல்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) பதிவாகி வருகின்றன

இதற்கிடையே இணைய துண்டிப்பு, மெதுவான செயல்பாடுகளின்போது பதிவுகளை சரியாக அனுப்புவதில் ஆசிரியர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்பாவிட்டால் விளக்கம் தர வேண்டும் என்பதால், கல்வி போதிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

தினமும் மாணவர் வருகைப்பதிவை செய்து முடிப்பதே போராட்டமாக மாறிவருகிறது.

செல்போன் செயலி 4ஜி இணையதள வேகத்தில் மட்டுமே சீராக இயங்குகிறது. 3ஜி வேகத்தில் பதிவுகளை முடிக்க கூடுதல் நேரமாகிறது.


சிக்னல் கிடைக்கும் இடங்களுக்கு சென்று பதிவிட்டால் பள்ளி அமைவிடம் குறித்த விவரம் பதிவாகாது.




பெரும்பாலான கிராமப்புறங்களில் 3ஜி இணையதள வசதியே இன்னும் முழுமையாக கிடைக்காத சூழல் நிலவுவதால் ஆசிரியர்கள் பெரிதும் அல்லல்பட வேண்டியுள்ளது.


இந்நிலையில் கல்வித்துறை செல்போன் செயலி வருகைப் பதிவை தினமும் தீவிரமாக கண்காணிக்கிறது. வருகைப்பதிவு செய்யாத பள்ளிகளை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்கிறது.


சத்துணவு தகவல்கள் செல்லாவிட்டாலும் ஆசிரியர்களை தொடர்புக் கொண்டு தொந்தரவு செய்கின்றனர்.


இதனால் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்பம் என்பது வேலையை குறைக்க வேண்டும்.


ஆனால், இதில் பணிச்சுமையே அதிகரித்துள்ளது. எனவே, இந்த செயலியில் உள்ள குறைகளை மேம்படுத்த வேண்டும்.


இணையதள வேகம் இல்லாத பகுதிகளில் குறுஞ்செய்தி மூலம் வருகைப்பதிவுகளை அனுப்பவும், சத்துணவு விவரங்களை சமூகநலத்துறை ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்