Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 10, 2019

முப்பருவ கல்வி முறைக்கு தமிழகத்தில் மூடுவிழா?

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் நடப்பில் உள்ள முப்பருவ கல்வி முறை 5, 8, 9ம் வகுப்புகளுக்கு முடிவுக்கு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 2012-13 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் முழுமையான தொடர் மதிப்பீடு என்ற புதிய முறையில் மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதனை போன்று 2013-14ம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை விரிவாக்கம் செய்யப்பட்டது. முப்பருவ தேர்வு முறையில் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையில் 60 மதிப்பெண் பாடங்களுக்கு தேர்வு எழுதினால் போதும், 40 மதிப்பெண்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும்.ஆனால் 10ம் வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுவதில் மாணவர்கள் சிரமம் அடைந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்திருந்தனர்.



இந்தநிலையில் வரும் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறையை ரத்து செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக 9ம் வகுப்பு பாட புத்தகங்களை மூன்று பருவங்களாக வழங்காமல் ஆண்டு முழுவதற்கும் சேர்த்து ஒரே புத்தகமாக தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு இதனை அறிவித்தது. மத்திய அரசின் சட்ட திருத்தத்தின்படி தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 5, 8 வது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் தற்போது 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ கல்விமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. முப்பருவ கல்வி முறையில் ஒரு பருவத்தில் கேட்கப்படும் கேள்விகள் அடுத்தடுத்த பருவங்களில் கேட்கப்படுவது இல்லை , தொடர்ந்து அந்த புத்தகங்களை மாணவர்கள் படிப்பதும் இல்லை.



வரும் கல்வியாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் தருவாயில் மூன்று பருவங்கள் சேர்த்து மொத்த மூன்று பருவ பாட புத்தகத்தையும் மாணவர்கள் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக முப்பருவ கல்விமுறை 1 முதல் 9ம் வகுப்பு வரை தொடர்ந்த நிலையில் அது 10ம் வகுப்பை எட்டவேயில்லை. மாறாக அடுத்த கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 5ம் வகுப்பு ஆகியவற்றுக்கு முப்பருவ கல்விமுறை மாற்றப்பட்டு பழைய கல்விமுறைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் சில வகுப்புகளுக்கு முப்பருவ கல்வி முறை கேள்வித்தாள் வடிவமைப்பும், மற்ற சில வகுப்புகளுக்கு முழு பாடதிட்டத்திட்டமும் என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.