Sunday, February 3, 2019

ஐகோர்ட் தீர்ப்பை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல் செய்க சமவேலை சமஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை தற்காலிக, ஒப்பந்த வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த கோரிக்கை.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அதே பணியை செய்யும் நிரந்தர ஊழியர்களைப்போல சம்பளம் நிர்ணயம் செய்ய நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையிலான மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.



இதற்கான அரசாணையை பிப்ரவரி 22க்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மட்டும் இல்லாமல், பள்ளிக்கல்விதுறையிலும் தற்காலிக ஒப்பந்த முறையில் ஜெயலலிதா ஆட்சியில் 2012ல் 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் தற்போது 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிசெய்து வருகின்றனர். உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் சிறப்பாசிரியர்கள் நிரந்தர ஊதியத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வருகின்றனர். கணினி அறிவியல், தோட்டக்கலை பாடங்களில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.



ஆனால் இதே பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்கள், பள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 8 கல்வி ஆண்டுகளாக அரசின் எந்தவித பணப்பலன்களையும் பெறமுடியாமல் ரூ.7ஆயிரத்து எழுநூறு மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒருமுறைகூட போனஸ் கொடுத்ததில்லை. வருடாந்திர 10% ஊதியஉயர்வும் சரிவர கொடுக்கவில்லை. P.F., E.S.I., கிடையாது. பணியில் சேர்ந்து பின்னர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிதி எதுவும் வழங்கவில்லை. மகளிருக்கு மகப்பேறு விடுப்பு எதுவும் கிடையாது, இதர விடுப்பு சலுகைகள் எதுவும் இல்லை. பள்ளி முழுஆண்டு தேர்வி கோடைகால விடுமுறையான மே மாதத்திற்கு சம்பளம் தருவதுமில்லை.



எனவே தற்போது ஐகோர்ட் தீர்ப்பினை பள்ளிக்கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட வேலையில் ஒப்பந்த முறையில் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கும் அமுல்செய்ய வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இவண்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203

Popular Feed

Recent Story

Featured News