Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 23, 2019

ஆசிரியர்களுக்கு பணிசுமை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணிகளில் கூட்டுறவு துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் போன்றவர்களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல்





தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்களவை பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் முடுக்கி விட்டுள்ளது.


அதன்படி, நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் செய்யப்பட வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமை தாங்கினார்.


இந்த கூட்டத்தில், கிரிராஜன் (திமுக), பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை (அதிமுக), தாமோதரன், பொன் கிருஷ்ணமூர்த்தி (காங்கிரஸ்), சவுந்தரராஜன், ஜெய்சங்கர் (பாஜக), மோகன்ராஜ், இளங்கோவன் (தேமுதிக), ஆறுமுகநயினார், உதயகுமார் (மார்க்சிய கம்யூனிஸ்ட்), பெரியசாமி, ஏழுமலை (இந்திய கம்யூனிஸ்ட்), பாரதிதாசன் (பகுஜன் சமாஜ்), அபுபக்கர், சாரதி (தேசியவாத காங்கிரஸ்) ஆகிய 9 கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டம் முடிந்து வெளியே வந்த அரசியல் கட்சியினர் நிருபர்களிடம் கூறியதாவது:


கிரிராஜன் (திமுக): தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக திமுக சார்பில் கூறியுள்ளோம்.


உதாரணமாக, ஆர்.கே.நகர் பகுதியில் 15 பாகங்களில் இரட்டை பதிவு, மூன்று முறை பதிவு, பலமுறை பதிவு என்று உள்ளது. இதற்கான ஆவணங்களை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்.


சென்னையில் 38 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். அது முறையாக நடைபெறவில்லை.


ஏற்கனவே ஆர்.கே.நகர் பகுதியில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்தபிறகு, மீண்டும் வாக்காளர் பட்டியலில் அந்த பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): தமிழகத்தில் முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.


மற்ற அரசியல் கட்சியினரும் இதே கருத்தை வலியுறுத்தி கூறியுள்ளனர். தேர்தல் பணியில் அனைத்து தரப்பு அரசு ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.


காரணம், ஆசிரியர்களுக்கு பணிசுமை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் கூட்டுறவு துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் போன்றவர்களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளோம்.


எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி, அதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்று தெரிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.


பெரியசாமி (இந்திய கம்யூ.): தமிழ்நாட்டில் ஒரே நாளில் முதல்கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.


மக்களவை தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிக்கான இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.


வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரிகள் வாக்குச்சாவடி அளவில் உள்ள திருத்தங்களை, நீக்கப்பட வேண்டிய பெயர்களை முறையாக பரிசீலித்து திருத்தம் செய்து வெளியிடுவதில்லை. அந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.


இளங்கோவன் (தேமுதிக): தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் இருப்பது தொடர்ந்து நீடிக்கிறது.


தேர்தலுக்கு முன் அதை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த 32 ஆயிரம் மனு நிராகரிப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். வாக்காளர் சேர்ப்புபணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது.


தனியார் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர்.


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 80 சதவீதம் ஆசிரியர்கள்தான் கலந்து கொண்டனர்.


தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. கைது மற்றும் பணியிட மாற்றம் என்று மிரட்டி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தது.
ஆசிரியர்களும் வேறு வழியின்றி போராட்டத்தை கைவிட்டு விட்டனர்.


இதனால், தேர்தல் நேரத்தில் ஆசிரியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படலாம் என்பதால்தான், நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

🔰பெயர் சேர்க்க இன்று, நாளை சிறப்பு முகாம்:

சிறப்பு முகாம் தமிழகத்தில்இன்றும் (23ம் தேதி), நாளை (24ம் தேதி) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெயர் சேர்க்கலாம். வீடு மாறியவர்கள் தங்கள் விலாசத்தை இந்த முகாமில் மாற்றலாம்

Popular Feed

Recent Story

Featured News