Sunday, February 17, 2019

மத்திய தகவல் ஆணையத்தில் காலி பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் இருக்கும் காலிப் பணியிடங்களை 6 மாத காலத்துக்குள் நிரப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, டெல்லியைச் சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், லோகேஷ் பத்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய தகவல் ஆணையம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தகவல் ஆணையங்களில் தகவல் ஆணையர்களின் பணி யிடங்கள் காலியாக உள்ளன. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தலைமை தகவல் ஆணையர்களே இல்லாமல் தகவல் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் (தகவல்கள் கோரி தாக்கல் செய்யப்பட்டவை) நிலுவையில் இருக்கின்றன. எனவே, இந்த பதவியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவானது, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: மத்திய தகவல் ஆணையம், மாநிலங்களில் செயல்படும் தகவல் ஆணையங்கள் ஆகியவற்றில் இருக்கும் தகவல் ஆணையர் களின் காலி பணியிடங்களை 6 மாத காலத்துக்குள் மத்திய அரசு நிரப்ப வேண்டும். அதேபோல், மேற்குறிப் பிட்ட பணியிடங்கள் காலியாவ தற்கு 2 மாதங்களுக்கு முன்பே, அவற்றை நிரப்புவதற்கான பணி களை அரசு தொடங்க வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். - பிடிஐ

Popular Feed

Recent Story

Featured News