Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 12, 2019

அரசு ஊழியர்கள் போராட்டம்: துணை முதல்வர் விளக்கம்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் தவறுகளுக்கேற்ப தண்டனை அளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செம்மலை பேசியது:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை உதவாக்கரை நிதிநிலை அறிக்கை என்று கூறியுள்ளார். இந்த வார்த்தை என் மனதை மிகவும் வருத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உதவாக்கரை திட்டமா?

சென்னையைச் சுற்றியுள்ளோருக்கு 38 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உதவாக்கரை திட்டமா? எனவே, எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் நியாயமே இல்லாமல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் இரண்டு அரசாணைகளைக் கொளுத்தினர். அந்த அரசாணைகள் திமுக ஆட்சியில் போடப்பட்டவை. அது தெரியாமல் போராட்டத்துக்கு திமுகவினர் தூபம் போட்டனர் என்றார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவைப் பேசுவதற்கு அனுமதித்தார்.


தங்கம் தென்னரசு: திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களைக் கைது செய்தோமா? வேலைவிட்டு நீக்கிவிடுவோம் என்று மிரட்டினோமா? என்றார்.
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து கூறியது:
இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து, தவறுகளுக்கேற்ப தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே, விசாரணை நடைபெற்று வரும் ஒரு விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டாம் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News