புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளை பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், இலவச பயிற்சி வழங்குவதாக அலன் கேரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. சிஆர்பிஎப் இயக்குநருக்கு இதுதொடர்பான அறிக்கையையும் அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன இயக்குநர் நவீன் மகேஸ்வரி கூறுகையில்,
''நம் நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறோம். மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளை பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் எங்களது கல்வி நிறுவனம் இலவச பயிற்சி வழங்க உள்ளது.
நாடு முழுவதும் உள்ள எங்களின் எந்த பயிற்சி மைய கிளையிலும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் இலவச பயிற்சி பெற முடியும். அதேபோல் கொல்லப்பட்ட இளம் வீரர் ஹேம்ராஜ் மீனா குழந்தைகளின் முழு கல்வி செலவை எங்களது நிறுவனம் ஏற்கும்'' என்றார்.