மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்காக நடைபெற்ற நீட் தேர்வில் தஞ்சாவூர் மாணவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தைப் பெற்றார்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜன. 6-ம் தேதி நடைபெற்றது.
இதில் 1.43 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜன. 31-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதன்கிழமை (பிப்.6) இரவு மதிப்பெண் பட்டியல் வெளியானது.
இதில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் ஈஸ்வரி நகரைச் சேர்ந்தவரும், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருபவருமான பி. செரின்பாலாஜி (22) அகில இந்திய அளவில் 7-வது இடத்தைப் பெற்றார்.
இதுகுறித்து செரின்பாலாஜி தெரிவித்தது:
பத்தாம் வகுப்பு வரை தஞ்சாவூரிலும், 11, 12 ஆம் வகுப்புகள் திருச்சி எஸ்ஆர்வி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் படித்தேன். கடந்த 2013-ம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் 1,180 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்றேன்.
தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறேன். அடுத்து, எம்.டி. படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினேன். இதில் அகில இந்திய அளவில் 7-வது இடம் கிடைத்துள்ளது என்றார் அவர். இவரது தந்தை பன்னீர், தாய் ராஜேஸ்வரி.