Saturday, February 2, 2019

சம்பளம் ஒரு வாரம் தள்ளிப் போகும்

வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டவர்களுக்கு ‘நோ ஒர்க், நோ பே’ என்று அரசு அறிவித்தது. அதாவது பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட 9 நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதுவரை இருந்த நடைமுறைப்படி, ஆசிரியர்களுக்கான சம்பள பில் ஒவ்வொரு மாதமும் 21ம் தேதிக்கு முன்னதாக அரசு கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தந்த மாத இறுதியில் சம்பளம் அவரவர்கள் கணக்கில் சேர்ந்துவிடும். மாத இறுதியில் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் வந்தால் அந்த நாளுக்கு முன்னதாக சம்பளம் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.
தற்போது ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் 22ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டதால், மேற்கண்ட முறைப்படி இந்த மாதத்துக்கான முழுச் சம்பளம் 1ம் தேதி வழங்கப்பட வேண்டும். போராட்ட காலத்துக்கான பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படும்.



ஆனால், 21ம் தேதிக்கு முன்பே வங்கிக்கு சென்ற சம்பள பில்லை, தற்போது அரசு அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது. போராட்ட காலத்தில் பணிக்கு வராதவர்களுக்கான சம்பளத்தை இப்போதே பிடித்தம் செய்ய வேண்டும் என்று அரசு பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமான விதியை மீறி அரசு இப்படி செய்துள்ளது ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 9 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யப்படுவோர் பட்டியல் எடுத்து அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்து கருவூலத்துக்கு சம்பள பில் வந்து சேர ஒரு வார காலம் ஆகும். அதற்கு பிறகே ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வந்து சேரும். இதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகலாம் என்று ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்

Popular Feed

Recent Story

Featured News