Tuesday, February 19, 2019

கல்விச் சீர் கொண்டு வந்த உருவம்பட்டி அரசுப் பள்ளிமாணவர்கள்..




அன்னவாசல்,பிப்.18:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறி தங்களது பள்ளிக்கும் தங்களுக்கும் தேவையான பொருட்களை கல்விச்சீராக கொண்டு சுற்றுவட்டார பொதுமக்களின் பாராட்டைப் பெற்றனர்.

அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது..



கல்விச்சீர் விழாவிற்கு பள்ளிமேலாண்மைக் குழுத் தலைவர் கருப்பையா தலைமையில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமக் கல்விக் குழுவினர் இணைந்து பள்ளிக்கும்,மாணவர்களுக்கும் தேவையான மின்விசிறி,பீரோ,மேசை,நாற்காலி,சாக்பீஸ்,பேப்பர் ,கம்யூட்டர் டேபிள்,விளையாட்டு பொருட்கள் ,குப்பைத் தொட்டி,குடம்,தட்டு,டம்ளர் ஆகிய பொருள்களை ஊர்வலமாக கொண்டு வந்து கல்விச் சீராக பள்ளிக்கு வழங்கினார்கள்...கல்விச் சீராக வந்த அனைத்துப் பொருள்களையும் பள்ளித்தலைமையாசிரியர் ஜெ.சாந்தி பெற்றுக் கொண்டார்.



விழாவில் கலந்து கொண்டு வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் பேசியதாவது:அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறி தங்களது பள்ளிக்கும் தங் களுக்கும் தேவையான பொருட்களை கல்விச் சீராக கொண்டு வந்த நிகழ்வை நினைக்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.இது வரை சீர் உறவினர்களது நிகழ்வின் போது வழங்கி இருப்போம்.ஆனால் இன்று மாணவர்கள் தங்கள் படிக்கும் பள்ளிக்கு கல்விச்சீரினை பெற்றோர் மூலம் கொண்டு வந்துள்ளனர்.கஜா புயல் போன்ற பாதிப்பு இப்பகுதியில் ஏற்பட்ட போதும் கல்விச் சீரினை மிகச் சிறப்பாக உருவம்பட்டி பள்ளிக்கு இங்குள்ள பொதுமக்கள் வழங்கி உள்ளீர்கள்.கல்விச் சீர் அன்று எப்படி பொருள்களை பள்ளிக்கு வழங்குனீர்களோ அது போல உங்களது குழந்தைகளையும் அரசுப்பள்ளிக்கு சீராக வழங்குங்கள்.

ஒரு குழந்தை கூட தனியார் பள்ளிக்கு செல்லக் கூடாது.அரசுப் பள்ளிக்கு உங்களது குழந்தைகளை அனுப்பி வையுங்கள் என்றார். விழாவில் அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர் அரு.பொன்னழகு,வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் கல்விச்சீர் கொண்டு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் குலவை இட்ட படியே பள்ளிக்கு கல்விச் சீர்கொண்டு வந்தனர். பின்னர் பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.முடிவில் ஆசிரியர் மோகன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமக்கல்விக்குழுவினர் மற்றும் பள்ளிமேலாண்மைக்குழுவினர் செய்திருந்தார்கள்.

Popular Feed

Recent Story

Featured News