Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 9, 2019

தேவைப்படும் துறையில் நான்கு வகுப்புப் பிரிவுகள் தொடங்கிக் கொள்ளலாம்: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலை. அனுமதி


கலை, அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கலை, அறிவியல் கல்லூரிகள் தேவைப்படும் துறைகளில் நான்கு வகுப்புப் பிரிவுகளைத் தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது என சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.



தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்களால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே நேரம், கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது 2018 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 500 முதல் 1000 விண்ணப்பங்கள் கூடுதலாக இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.



மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதால், ஒப்பளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதுபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் கோரிக்கையின் அடிப்படையில் கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நிரப்பிக்கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் அனுமதித்து வருகிறது.
இந்த நிலையில், கலை-அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்கள் ஆர்வமும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், இதற்கான நிரந்தரத் தீர்வாக தேவைப்படும் துறைகளில் கூடுதல் வகுப்புத் துறைகளை தொடங்க அனுமதிக்கவேண்டும் என தனியார் கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வந்தன.



இதனை ஏற்றுக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம், கலை-அறிவியல் கல்லூரிகள் தேவைப்படும் துறைகளில் 4 வகுப்புப் பிரிவுகளைத் (செக்ஷன்) தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது. இதுவரை, ஒவ்வொரு படிப்பிலும் அதிகபட்சமாக 3 வகுப்புப் பிரிவுகளைத் தொடங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுவந்தது. இப்போது கூடுதலாக மேலும் ஒரு பிரிவைத் தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது என பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:



ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் ஆர்வம் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் கோரிக்கை அடிப்படையில், ஆய்வுக் குழு ஆய்வு செய்து தேவையான ஆசிரியர்கள், பிற உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகே துறைகளில் 4 ஆவது வகுப்புப் பிரிவுத் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News