Join THAMIZHKADAL WhatsApp Groups

ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை தடுக்க விரல் ரேகை மூலம் வருகை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், சைட் இன்ஜினியர்களை தவிர்த்து அலுவலக பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் காலை 10 மணிக்கு பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் காலை 10.30 மணிக்கு மேல் தான் பணிக்கு வருகின்றனர். ஊழியர்கள் தாமதாக பணிக்கு வந்தால் அவர்களுக்கு அரைநாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்நது ஊழியர்கள் பணிக்கு காலை 10 மணிக்கே வர வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமை அறிவுரை வழங்கியது. ஆனால், அதன்பிறகும் தொடர்ந்து ஊழியர்கள் தாமதமாக வந்தனர்.இதையடுத்து ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதை தடுக்கும் வகையில் விரல் ரேகை மூலம் வருகை பதிவு செய்யும் இயந்திரம் வைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இந்த வருகை பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டவுடன் ஊழியர்கள் தாமதமாக வந்தால், அவர்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.