மாணவர்களின் திறன் வளர்த்தலுக்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் பிரிட்டிஷ் கவுன்சிலும், தமிழ்நாடு அரசும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:-
தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல், நூலகத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டு திறன் பகிர்வு ஆகியவற்றை வளர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக அரசுக்கும், சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
புதிய கட்டடங்கள் திறப்பு: முன்னதாக, உயர்கல்வித் துறையின் சார்பில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் புதிதாகக் கட்டடப்பட்ட கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி மாவட்டம் தேக்கம்பட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் பெரும்பாக்கம் அரசு கலை-அறிவியல் கல்லூரி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரி ஆகியவற்றுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், விழுப்புரத்தில் கட்டப்பட்ட திருவள்ளூர் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றுக்கு கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வர் திறந்தார். இதேபோன்று, வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.