Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 23, 2019

காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

புல்வாமா சம்பவத்தை அடுத்து, காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களில் தாக்கப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், அவற்றைச் சார்ந்த கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


அதில் கூறியுள்ளதாவது:
நாட்டில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தங்களது வளாகத்துக்குள்ளாக காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் பாதுகாப்புச் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதுடன், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் காவல்துறையின் உதவியை நாடலாம்.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, மாணவர்களின் பாதுகாப்பையும், கல்லூரி வளாகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறுகையில், காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக மண்டல அலுவலர்கள் மூலமாக சோதனை நடத்தினோம். அவர்களுக்கு இதுவரையில் எந்தவொரு பிரச்னையும் இல்லை.


பிரதமர் சிறப்பு கல்வி உதவித் திட்டம் மூலமாக காஷ்மீர் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு ஆசிரியர் இந்த விவகாரத்துக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News