Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 23, 2019

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த அ.தி.மு.க., எதிர்ப்பு -முழு விவரம்

'லோக்சபா தேர்தல் அட்டவணையின்படி, முதல் கட்டத்திலேயே, தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, இதர துறை ஊழியர்களை, தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை, தலைமை செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம், தேர்தல் கமிஷன் சார்பில், நேற்று நடந்தது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசியது குறித்து, அரசியல் கட்சியினர் கூறியதாவது:அ.தி.மு.க., - ஜெயராமன்: லோக்சபா தேர்தல், பல கட்டமாக நடக்கும். அதில், முதல் கட்டத்திலேயே, ஒரே நேரத்தில், தமிழகத்தில் தேர்தலை நடத்த வேண்டும். குடிநீர் உட்பட அத்தியாவசிய பணிகளை, தேர்தலை காரணம் காட்டி தடை செய்யக் கூடாது. தேர்தல் பணியில், அனைத்து தரப்பு ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும்.ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, கூட்டுறவுத் துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் போன்றோரை, தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினோம்.

தி.மு.க., - கிரிராஜன்: வாக்காளர் சிறப்பு முகாம் குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. உதாரணமாக, சென்னை - ஆர்.கே.நகரில், 15 பாகங்களில், இரட்டை பதிவு, மூன்று முறை பதிவு உள்ளதை, தேர்தல் அதிகாரியிடம் வழங்கினோம். அவர், உடனடியாக நீக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.சென்னையில், 38 ஆயிரம் பேர், 'ஆன்லைன்' வழியே, வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். அதில், முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆர்.கே.நகரில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்கள், மீண்டும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த தவறுகளை களைந்து, தேர்தல் நடத்த வேண்டும் என, வலியுறுத்தினோம்.

இந்திய கம்யூ., - பெரியசாமி: லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, சேர்த்து நடத்த வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்; பந்தல் அமைக்க வேண்டும் என கோரினோம்.தே.மு.தி.க., - இளங்கோவன்: வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு, மூன்று பதிவுகள் உள்ளன; அவற்றை நீக்க வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், தனியார் ஏஜன்சியை ஈடுபடுத்த வேண்டும் என, கூறி உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

Popular Feed

Recent Story

Featured News