Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 12, 2019

சராசரியாக படிக்கும் மாணவர்களும் போட்டி தேர்வில் வெற்றி பெறலாம் கல்லூரி விழாவில் கலெக்டர் கணேஷ் பேச்சு

சராசரியாக படிக்கும் மாணவர்களும் போட்டி தேர்வில் வெற்றி பெறலாம் என குடுமியான்மலை வேளாண். கல்லூரி விழாவில் கலெக்டர் கணேஷ் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் பன்முக போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை கலெக்டர் கணேஷ் வழங்கினார். மேலும் முன்னாள் மாணவர் மன்றத்தை துவக்கி வைத்து மாணவர் மன்றத்திற்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் அறிமுகப்படுத்தினார். கஜா புயலில் நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கலெக்டர் பேசியதாவது:



தமிழக அரசின் சார்பில் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் படிப்பு முடித்தவுடன் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு அரசு பணிக்கு செல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் இக்கல்லூரிக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.


போட்டித் தேர்வினை நன்கு படித்தவர்கள் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்பது கிடையாது. சராசரியாக படிக்கும் மாணவர்களும் போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெறலாம். இதன்படி போட்டி தேர்வை எதிர்கொள்பவர்கள் நன்கு திட்டமிட்டு அயராது படித்தால் வெற்றி நிச்சயம். எனவே இப்போட்டி தேர்வுக்களுக்குரிய புத்தகங்களை உரிய முறையில் படித்து தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கணேஷ் பேசினார். நிகழ்ச்சியில் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் சிவசுப்பிரமணியம், வேளாண் இணை இயக்குனர் சுப்பையன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News