Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 24, 2019

இஸ்ரோ பயணம், கூகுள் அங்கீகாரம், டூடுல் போட்டி, யூடியூப் சேனல்... முன் மாதிரி அரசுப் பள்ளி!


"எங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவி ஜோதிலட்சுமி தேர்வாகி இஸ்ரோ செல்லும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு சென்று, ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் மாதிரி, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடல் என்று நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இது எங்கள் பள்ளியே பெருமைப்படக்கூடியது இல்லையா?"



கல்வியில் தொழில்நுட்பத்தைச் சரியான கோணத்தில் இணைக்கும் பட்சத்தில் ஆரோக்கியமான மாற்றம் நிகழும். தனியார் பள்ளிகளில் மாணவர்களை தம் வசம் ஈர்ப்பதற்காகப் பலவித தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாக விளம்பரம் செய்வதையும் நாம் பார்க்க முடியும். ஆனால், அரசுப் பள்ளிகளில் தற்கால தொழில்நுட்பத்தின் பங்களிப்பைப் பார்ப்பது அரிது. ஆனாலும், பல ஆசிரியர்கள் முனைப்போடு, மாணவர்களுக்கு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தவும், அதன் வழியே பாடங்களைக் கொண்டு சேர்க்கவும் பெரு முயற்சி எடுத்து வருவதை மறுக்க முடியாது. அப்படிப்பட்டவர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்தான் ஆசிரியர் சரவணன்.



திருப்பூர், பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ளது மேட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. அங்குதான் மாணவர்களுக்குக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சிகளைக் கையாண்டு வருகிறார் வருகிறார் ஆசிரியர் சரவணன். அவரைத் தேடி, பள்ளிக்குச் சென்றபோது, மிகவும் உற்சாகத்தோடு வரவேற்றுப் பேசினார். ``பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றலில் சில இடர்பாடு இருக்கக்கூடும். ஒவ்வொருவருக்கும் கற்பிக்க தனித்தனி முறைகள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதுதான் ஓர் ஆசிரியரின் வெற்றி. மாணவனை, புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கப் பழக்க வேண்டும். அதற்குத் தொழில்நுட்பம் சிறப்பாக உதவும். அதைச் சரியா பயன்படுத்தினால், பல விதங்களிலும் நிச்சயம் பயன் தரும்.



சில மாதங்களுக்கு முன்பு, உலக விண்வெளி வாரத்தையொட்டி ஆன்லைன் தேர்வு ஒன்றினை, தமிழ்நாட்டு அளவில் நடத்தினார்கள். அதில் தேர்வாகும் 4 பேர் இஸ்ரோ அழைத்துச் செல்லப்படுவார்கள். எனவே, எங்கள் பள்ளி மாணவர்கள் 100 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்களில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஜோதிலட்சுமி தேர்வாகி இஸ்ரோ செல்லும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு சென்று, ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் மாதிரி, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடல் என்று நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இது எங்கள் பள்ளியே பெருமைப்படக்கூடியது இல்லையா?" என்று கேட்டுவிட்டு, தொடர்கிறார்.



``கோயம்புத்தூரில் நடந்த ரோபாட்டிக் பயிற்சி வகுப்புக்கு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவரை அழைத்துச் சென்றோம். அவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் விதத்தில் அந்தப் பயிற்சி வகுப்பு இருந்தது. மேலும், எங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செய்திகளை அப்டேட் செய்யும் விதமாக, இஸ்ரோவில் ராக்கெட் ஏவும் நாள்களில் அதை லைவ்வாக கணினி அறையில் போட்டுக்காட்டுவோம். கவுண்டவுன் எண்ணுவதை மாணவர்கள் அனைவரும் ஆர்ப்பரிப்புடன் காண்பார்கள். அது மட்டுமின்றி 'ஸ்கைவாட்ச்' நிகழ்வு நடத்தி விண்வெளி கோள்களைப் பார்க்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளித்தோம்" என்றவரிடம் மாணவர் ஒருவர் நோட்டுடன் வந்து சந்தேகம் கேட்க, அதை விளக்குகிறார்.



``கூகுள் டூடுல் உருவாக்கும் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வது மிகவும் குறைவு. அதற்காகவே, கூகுள் போட்டிகள் அறிவிக்கும்போது எங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி, அதில் கலந்துகொள்ளும் சூழலை உருவாக்கித் தருகிறோம். இது அவர்களுக்குக் கற்பனைத் திறனை வளர்ப்பதோடு, தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. வகுப்பறைகளில் புதிய முயற்சியாக, டெஸ்ட்களுக்கான கேள்விகளை புரொஜெக்டர் மூலம் காண்பித்து அதற்கு விடைகளைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு அட்டைகளை வழங்கிவிடுவோம். கேள்விக்கு உரிய பதிலை அவர்கள் தேர்வு செய்து தன்னிடம் உள்ள அட்டையைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு டெஸ்ட் பற்றிய பயம் அகன்று, ஆர்வம் வந்துவிடுகிறது.



ஆக்மெண்டட் ரியாலிட்டி ஆப் மூலமாகப் புத்தகத்தில் உள்ள படங்களை, ஸ்கேன் செய்தால் அதுகுறித்து வரும் வீடியோக்கள் வந்துவிடும். அதைப் பார்த்து இன்னும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமும் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையையும் முயன்று வருகிறோம். எங்கள் உதவியுடன் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி தர்ஷினி செய்த காயின் வெண்டிங் மெஷின் (coin vending machine) கூகுள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுச் சிறந்த ஐடியாவுக்கான சான்றிதழைப் பெற்றது. பள்ளிக்குத் தனியாக யூடியூப் சேனலும், வெப்சைட்டும் உள்ளன. பள்ளி நிகழ்வுகளை அதில் பகிர்ந்து வருகிறோம்" என்று பெருமையாகச் சொன்னவரிடம், "எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்தவையாகவே இருக்கின்றனவே?" என்றோம்.



``தொழில்நுட்பம் மட்டுமல்ல, நல்ல பண்புகளை வளர்க்கும் விதத்துக்கும் நிறைய வழிகளைக் கடைப்பிடிக்கிறோம். எங்கள் பள்ளி வகுப்புகளில் தனியாக லீடர் என்று யாரும் கிடையாது. தினமும் ஒருவர் லீடராக இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகளின்றி சமமாகப் பழகுவதற்குப் பெரிய அளவில் இது உதவுகிறது. மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாள்களில் அதிக மரக்கன்றுகள் தந்து, அவற்றை நடச் சொல்கிறோம். சிறப்பாகப் பராமரிக்கும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்துகிறோம்.

இதற்கு 'ஃப்யர் ட்ரஸ்ட்' எனும் அமைப்பு, 3 மாணவர்களுக்கு 'பசுமை பாதுகாவலர்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவதைக் குறைத்து சில்வர் பாட்டில்கள் உபயோகத்திற்கு மாணவர்களை மாற்றி வருகிறோம். அனைத்து மாணவர்களும் நூலகத்தில் உறுப்பினராக வேண்டும் எனவும் கூறி செயல்படுத்தி வருகிறோம். தனியார் பள்ளிகளை விடவும் சிறந்து விளங்கும், இதுபோன்ற அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் கொண்டாடுவதற்கு தயங்கவே கூடாது

Popular Feed

Recent Story

Featured News